அனிதாவின் துயர மரணத்திற்கு மத்திய அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ பேட்டி

அரியலூர் மாணவி அனிதாவின் துயர மரணத்திற்கு மத்திய அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

Update: 2017-09-03 23:30 GMT

விருதுநகர்,

விருதுநகரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறியதாவது:–

அரியலூர் மாணவி அனிதாவின் துயர மரணத்திற்கு மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதில் மாநில அரசை குற்றம் சாட்டுவது என்பது அரசியல் காரணத்திற்காகத்தான். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என உச்சநீதிமன்றத்தில் வாதாடிய தமிழக அரசின் வக்கீல் தனது வாதத்தின் போது தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டிற்கு அ.தி.மு.க. அரசு பச்சைத் துரோகம் செய்து விட்டது என குற்றம்சாட்டியவன் நான். அடுத்த 48 மணி நேரத்திற்குள் முதல்–அமைச்சர் அலுவலத்திற்கு முன் முற்றுகை போராட்டம் நடத்தினேன். தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டார் என குற்றம் சாட்டினேன்.

நீட் தேர்வு பிரச்சினையில் மாநில அமைச்சர்கள் மற்றும் முதல்–அமைச்சர் தங்கள் உயரத்திற்கு ஏற்றபடி முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் மத்திய அரசு தான் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது. மத்திய அரசு, மாணவி அனிதாவை கொலை செய்து விட்டது. தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என சொல்வது எளிது. நான் தற்கொலையை ஊக்குவிப்பவன் அல்ல. மாணவி அனிதா 10–ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று பிளஸ்–2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று மருத்துவராகலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். உச்சநீதிமன்றம் வரை போராடிய அவர் மத்திய அரசு விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் மத்திய அரசு ஏமாற்றி விட்டதால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய அரசு இன்னும் எத்தனை அனிதாக்களின் வாழ்க்கையை சூறையாடப்போகிறது என்பது தெரியவில்லை. நீட் தேர்வு பிரச்சினையில் மாநில அரசின் உரிமைகளை நரேந்திர மோடி அரசு காலில் போட்டு நசுக்கி விட்டது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். அனிதா என்ற இளம்தளிர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்