கோவையில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் 5 பேர் கைது

கோவையில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-04 00:30 GMT

கோவை,

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1–ந் தேதி கோவை மாவட்டத்தில் 190 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு சில திருத்தங்கள் செய்து உத்தர விட்டது. அதன்படி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் நகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நகரப்பகுதிக்குள் மூடப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவை புலியகுளம் தாமுநகர் பி.என்.பாளையம் சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை நேற்று காலை திறக்கப்பட இருந்தது. இதற்காக அந்த கடையையொட்டி உள்ள மதுபாரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தன.

மூடப்பட்ட கடை மீண்டும் திறக்கப்படும் தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் அங்கு குவிந்தனர்.

அவர்கள் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவர்கள், மதுபாருக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து சாலையில் போட்டு உடைத்து சூறையாடினார்கள். அவர்கள், பாரில் இருந்த பிளாஸ்டிக் மேஜை, நாற்காலிகளையும் எடுத்து வீசி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மது பாட்டில்களை உடைத்தவர்களை போலீசார் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:–

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் திறந்திருந்த இந்த கடையை கோர்ட்டு உத்தரவுப்படி மூடியதால் நிம்மதி அடைந்தோம். ஆனால் இப்போது மீண்டும் இந்த கடையை திறந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முன்பு இங்கு கடை இருந்தபோது பெண்கள் நடமாடவே முடியாத நிலை இருந்தது. குடித்து விட்டு அட்டகாசம் செய்தவர்களால் பெண்களும், குழந்தைகளும் அந்த வழியாக செல்லவே அச்சம் அடைந்தனர். மாணவர்கள் கூட குடிப்பழக்கத்துக்கு ஆளானார்கள். எனவே இந்த பகுதியில் மீண்டும் கடை களை திறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் மதுக்கடையை திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது உடையாமல் கிடந்த மதுபாட்டில்களை சிலர் அள்ளிச்சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அதையும் மீறி சிலர் தங்கள் சட்டை, பேண்டு பாக்கெட்டுகளில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

மேலும் செய்திகள்