கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

Update: 2017-09-03 23:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை பணி, கோடநாடு மெயின்ரோடு முதல் பொன்னூர் காலனி வரை ரூ.9 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சாலை பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கெரடாமட்டம் முதல் சுண்டட்டி வரை ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை பணி, நெடுகுளா பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சாலை பணி மற்றும் காக்காசோலை பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலமூலா பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி மையம், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட செரியேரி பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாயுடன் கூடிய தடுப்புச்சுவரை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

தாளூர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் நடந்து முடிந்த கொத்தலகுண்டு சாலை, செருமுள்ளி கிராமத்தில் நீர்வள ஆதார அமைப்பு துறையின் (பொதுப்பணித்துறை) சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வாய்க்கால், அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையத்தினையும் அவர் ஆய்வு செய்தார். இந்த வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், உதவி இயக்குனர் (கிராம வளர்ச்சி) மேகநாதன், செயற்பொறியாளர் பசுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்