மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

மாணவி அனிதாவின் சாவுக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தாராபுரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம்தமிழர் கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-03 23:00 GMT

தாராபுரம்,

அரியலூர் மாணவி அனிதாவின் சாவுக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. திருப்பூர் மாவட்டத்திலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யாமல், மாணவி அனிதாவின் சாவுக்கு காரணமாக இருந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதிகேட்டும், பூக்கடை கார்னர் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் துரை, பிச்சைமுத்து, லோகநாதன், மதன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்