தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

Update: 2017-09-04 01:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவினாசி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வினால் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அனிதா தற்கொலை சம்பந்தமாக ஒரு அவதூறான கருத்தை கூறியிருக்கிறார். அவர் சமீபகாலமாக பாரதீய ஜனதாவை ஆதரிக்க தொடங்கியதில் இருந்து தமிழ்நாடே ‘நீட்’ தேர்வை எதிர்த்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அவர் ‘நீட்’ தேர்வை ஆதரித்துக்கொண்டிருக்கிறார். ஆதிதிராவிட மக்களின் ஒரு பிரிவினரை பட்டியலில் இருந்து வெளியில் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார். இது அவர்களின் உரிமையை பாதிப்பதாக அமைகிறது.

பிளஸ்–2 தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் தன்னுடைய டாக்டர் கனவு நிறைவேறவில்லையே என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் இறப்பை கொச்சைப்படுத்தி வருகிறார். பா.ஜனதாவுக்கு ஆதரவான பிரசாரத்தை அவர் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக பாடத்திட்டம், தேர்வு முறை உள்ளிட்டவைகளை மாநில அரசு தான் தீர்மானிக்கிறது. இதனால் மத்திய அரசின் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது எவ்வாறு ஏற்று கொள்ள முடியும். தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் அதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தனியார் பள்ளிகள் தான் வளர்ந்து வருகிறது. நிதி ஆயோக் குழுவின் 3 ஆண்டு செயல்திட்டம், மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. திடீர் அறிவிப்பால் நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.17 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. இதில் ரூ.16 லட்சத்து 84 ஆயிரம் கோடி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இதனால் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி என்பதை மோடி ஒத்துக்கொள்வாரா?. ஜி.எஸ்.டி., ‘நீட்’, காவிரி மேலாண்மை உள்ளிட்ட தமிழ்நாட்டு சார்ந்த பல பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான ரூ.17 ஆயிரம் கோடி நிதியை கொடுக்காமலே வைத்துள்ளனர்.

அ.தி.மு.க. அரசை பொறுத்தவரை இவர்களுக்குள் நடக்கும் மோதல்களில் மக்கள் பாதிப்படைகின்றனர். 3 அணிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த கட்சி பலவீனம் ஆகிவிட்டது. இதை பயன்படுத்தி பா.ஜனதா தன் கட்டுப்பாட்டில் கட்சியை வைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். மத்திய அரசின் அறிவிப்புகளை தமிழக அரசு எதிர்க்கும் நிலையில் இல்லை. அரசு என்ற ஊழல் சாம்ராஜ்யத்திற்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டியில் அ.தி.மு.க. அரசு உள்ளது. அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கான அறிக்கையும் வந்து விட்டது. இதை தமிழக அரசு ஏன் எதிர்க்கவில்லை. இதனால் தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்