அனிதா தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் மறியல் போராட்டம்; 34 பேர் கைது
மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி பகுதியை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி அனிதாவின் மருத்துவக்கனவை தகர்த்து, உயிரைப்பறித்த நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டம் தமிழ்நாடு முழுவதும் வலுத்து உள்ளது. நேற்றும் இந்த போராட்டங்கள் தொடர்ந்தன.
ஈரோட்டில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் குமார் தலைமை தாங்கினார். ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு கூடிய நாம் தமிழர் கட்சியினர் மத்திய– மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கோஷங்களாக எழுப்பிய போராட்டக்குழுவினர் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரையும் கைது செய்து அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சிந்தனை செல்வன் தலைமையில் போராட்டக்குழுவினர் காளை மாடு சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் ரெயில் நிலைய நுழைவுவாயிலை கடந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது போராட்டக்குழுவினர் வேனில் ஏறாமல் தரையில் உட்கார்ந்து கொண்டு மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 11 பேரும், தமிழ்ப்புலிகள் கட்சியினர் 23 பேரும் என மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.