31.ஊரே சமைக்குது

மனித நாகரிகத்தை மாற்றியமைத்தது நெருப்பு. குளிரி லிருந்து காத்துக்கொள்ளவும், இருளிலிருந்து விடுபடவும் நெருப்பே உதவியது.

Update: 2017-09-03 08:00 GMT
னித நாகரிகத்தை மாற்றியமைத்தது நெருப்பு. குளிரி லிருந்து காத்துக்கொள்ளவும், இருளிலிருந்து விடுபடவும் நெருப்பே உதவியது.

காடுகளில் வாழ்ந்த மனிதன் இரவு நேரத்தில் விலங்குகளுக்கும், விஷ ஜந்துக்களுக்கும் அச்சப்பட்டு அரைகுறையாகத் தூங்கியபோது நெருப்பு அவன் வாழ்வில் ஒளியைச் சேர்த்தது.

மனிதன் கைகளில் அது ஆயுதமானது. அதைக்கொண்டு அவன் விலங்குகளை விரட்டினான். கொடூரமான மிருகங் களும் நெருப்பைக் கண்டால் நடுங்கின. நெருப்பை கையகப்படுத்தி அவன் முன்னேறத் தொடங்கினான். நெருப்பால் உலோகங்களை உருக்கினான். வீடுகள் அமைத்தான்.

தொடக்கத்தில் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்கிற பொறுப்பு அவனுக்கு இருந்தது. சிக்கிமுக்கிக் கற்களில் நெருப்பை உண்டாக்க முடியும் என அறிந்தபோது மனித நாகரிகம் அடுத்த கட்டத்திற்குத் தாவியது.

மாமிசத்தைச் சாப்பிட வேட்டையாடும்போது அவன் சூடாகச் சாப்பிடும் ருசியை உணர்ந்தான். வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தைச் சாப்பிடும்போது அது சூடாக இருக்கும். அதன் மிச்சசொச்சமே, இன்று தேநீர் கொஞ்சம் சூடு ஆறினால் அவனை சூடாக்கி விடுகிறது.

கிரேக்கப் புராணத்தில் புனைவியல் கதை ஒன்று உண்டு...

தேவர்களிடம் மட்டுமே நெருப்பு இருந்ததாம். மனிதர்களுக்கு அதன் ரகசியம் தெரியாது. ‘புரோமத்தியஸ்’ என்கிற தேவன் மனித இனத்தை மண்ணைப் பிசைந்து உயிர் கொடுத்து உருவாக்கியவன். அதனால் அவனுக்கு மானுடத்தின் மீது மென்மையான மனம். அவர்கள் செழிக்க வேண்டுமே என்பதற்காக தேவலோகத்திலிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டுவந்து மனிதர்களிடம் கொடுத்து விடுகிறான்.

நெருப்பைத் தெரிந்துகொண்டால் மனிதர்கள் நமக்குச் சமமாக ஆகிவிடுவார்கள் என்கிற கோபத்தில் ‘ஜீயஸ்’ என்கிற தேவர்களின் தலைவன் அவனுக்குத் தண்டனை வழங்கு கிறான். சங்கிலியால் பிணைக்கப்பட்ட அவனுடைய இதயத்தை பகலில் வல்லூறு ஒன்று வந்து கொத்தித் தின்னும். இரவில் மறுபடியும் இதயம் வளரும், மறுநாள் மீண்டும் கழுகு வந்து கொத்திக் கிழிப்பதற்காக.

பஞ்சபூதங்களில் நெருப்பு அலாதியானது. அதை மட்டுமே நம்மால் உருவாக்க முடியும். தொடக்கத்திலிருந்து மாசு படாமலிருப்பதும் நெருப்பே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல இப்போது நெருப்பு இல்லை என்று சொல்ல முடியாது. தான் அழுக்காகாமல் தூய்மைப்படுத்தும் குணம் நெருப்புக்கு உண்டு.

இந்தியாவில் துறவறம் மேற்கொள்கிறவர்கள் நெருப்பை உபயோகப்படுத்தக் கூடாது என்கிற விதிமுறை பழங்காலத்தில் உண்டு.

நெருப்பு மனிதர்களிடையே ஆயுதமானது. அம்புகளில் பந்தங்களைச் சுற்றி எதிரிகளின் மீது எறிவது உண்டு. நெருப்பின் மாறுபட்ட வடிவமே துப்பாக்கிக் குண்டு. ஆனால் அது வேகத்தைக் கொண்டே அழிவை நிகழ்த்துகிறது. வேகம் குறைந்த குண்டை கைகளால் பிடித்துவிட முடியும். அதற்கு குண்டைக் காட்டிலும் வேகமாக நாமிருக்க வேண்டும்.

நெருப்பு மனிதனின் உணவை சுவையாக்க உதவியது. வேட்டையில் சூடாய் உண்ட அனுபவமே அவன் சமைப்பதற்குத் தூண்டியது. தீயின் உதவியால் கடினமான காய்கறிகள் ருசியாக மாறின. செரிப்பது எளிதானது. தேவையானவற்றை மட்டும் உண்பதற்கு உபாயம் கிடைத்தது.

உணவு பிறந்தபோது கொண்டாட்டங்களும் பிறந்தன. இன்று உணவில்லாத கொண்டாட்டம் இல்லை. குழந்தை பிறந்தபோதும் விருந்து, அதற்கு செவிகலன்கள் அணிவிக்கும்போதும் விருந்து, பருவம் எய்தியதும் விருந்து, திருமணமாகையில் விருந்து என்று நம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் உணவுக்கு உண்டு மரியாதை.

எந்த மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள உணவே ஊடகம். அதிக மதிப்பெண் பெற்றால், பரிசு கிடைத்தால், பதக்கம் வென்றால், புத்தகம் வெளியிட்டால், விருது தந்தால், விடுதலை நாள் கொண்டாடினால் மகிழ்ச்சியை விருந்தின் மூலமே பகிர்ந்துகொள்ள முடியும்.

அடுத்தவர் வயிறு நிரம்புவதில் நம் மனது நிரம்புவதே பண்பாடு. ‘இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே தொட்டுப்பார் உன் நெஞ்சை தோன்றும் இன்பம்’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

உணவு இரண்டு இதயங்களை எளிதில் இணைத்து விடுகிறது. அத்தனை வருத்தங்களையும் சமமாக அமர்ந்து உண்ணும்போது போக்கிக்கொள்ள முடியும். ஒருவருக்கு உணவளிக்கும்போது அவரை மதிக்கிறோம் என்று பொருள்.

அதனால்தான், ‘வெனிஸ் நகரத்து வியாபாரி’யில் ஷைலாக் ஆண்டனியோவோடு சாப்பிட மறுக்கிறான். ‘உன்னோடு பேசுவேன், நடப்பேன், வியாபாரம் செய்வேன். ஆனால் சாப்பிட மாட்டேன்’ என்று திட்டவட்டமாகத் தெரிவிப்பான். உண்ட உடன் அன்னியோன்யம் அரும்பிவிடும். அதையே தமிழில் ‘உப்பிட்டவரை உள்ளவரை நினை’ என்று சொலவடையாகச் சொன்னார்கள்.

ஒரு காலத்தில் வீட்டு விழாக்களுக்கு இல்லத்தினரே சமைப்பார்கள். வருகிற உறவினர்கள் ஆளுக்கொரு பணியைச் செய்ய அறுசுவை உணவு சில மணி நேரத்தில் தயாராகிவிடும். ஒருவர் காய் நறுக்க, ஒருவர் கீரை ஆய, இன்னொருவர் சாதம் வடிக்க மளமளவென ஆவி பறக்கும் சமையல் அனைவருக்கும் பரிமாறப்படும்.

ஒருவர் வீட்டிலிருந்து வாழை இலை வரும். இன்னொருவர் தோட்டத்தில் விளைந்த கத்திரி சாம்பாராகும். வேறொருவர் முருங்கை காரக்குழம்பாக ஊர் முழுக்க மணக்கும். இப்படி பகிர்ந்து கொள்வதே விசேஷத்தை விருந்தாக்கும். ஊரில் ஒருவர் வீட்டு திருமணமென்றால் வேறெந்த வீட்டிலும் அடுப்பெரியாது. கிடைத்த திண்ணைகள் கட்டில்களாகும். விறகிருக்கும் வீடுகளில் குளிக்க வெந்நீர் தயாராகும்.

இப்போது திருமணங்கள் மண்டபங்களோடு நிற்பதால் உறவுகள் விடுதிகளோடு முடிந்துவிடுகின்றன. முகவரி தெரியாத உற வினர்களே அதிகம். அலைபேசி எண்கள் போதும். சாதாரண நாட்களில் வீட்டுக்கு வருகிறவர்கள்கூட குடித்த தேநீர்க் குவளையைக் கழுவி வைக்கவும் தயாராக இல்லை. வருகிறவர்களையும் அழைத்துக்கொண்டு உணவகங்களுக்குச் செல்லுகிற ஓய்வு மனப்பான்மை இப்போது அதிகம்.

திருமணங்களுக்குச் சமைப்பதற்குத் திறமை வேண்டும். ‘சமைத்துப் பார்’ புத்தகங்களைப் பார்த்து சிட்டிகை அளவு உப்பைப் போடுகிற உன்னிப்பான செயலல்ல அது. அனுபவத்தின் காரணமாக இரண்டு கைகளில் உப்பையும், சீரகத்தையும், பூண்டையும் அள்ளிப்போட்டு சமைக்கிற ராட்சத வேலை. எல்லோருக்கும் பிடித்தமாய் இருக்க வேண்டும். ருசி பார்த்து மாற்றுவதற்கு அவகாசமில்லை. எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகம் வந்தால் உடனடியாக இன்னொரு சாம்பார் தயாரிக்க வேண்டும். சோற்றை வடித்துக் கொட்ட வேண்டும்.

இப்போதுகூட தமிழகத்தில் கல்யாண சமையல்களுக்கு சில ஊர்கள் பிரபலம். சமையல் குடும்ப ரீதியாக வருவது. தாயின் கை மணம் மகளுக்கு வரும். ஊரின் சுவை ஒவ்வொரு வீட்டிலும் இழையோடும்.

ஒரு ஊரே சமையலைத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் மாளூர் தாலுக்காவில் கொன்ற ஹள்ளி என்ற ஊரில் மொத்தமிருக்கும் 60 குடும்பங்களில் ஒருவரைத் தவிர அனைவருக்கும் சமைப்பதே தொழில். ஆசிரியப் பணியில் ஓய்வு பெற்ற ஒருவர் மட்டும் இன்னும் கரண்டியை கைகளில் தூக்கவில்லை.

ஒட்டுமொத்த ஊரும் உப்புச்சப்போடு சமைக்க ஆரம்பித்த தற்கு வேலைவாய்ப்பின்மையும், வறட்சியும், தரிசு நிலங் களுமே காரணம்.

வேளாண்மைத் தொழிலை நம்பி பயனில்லை என்றபோது தாளாண்மையை அவர்கள் பணியாகத் தேர்ந்தெடுத்தார்கள். பலரும் படித்தவர்கள். சிறப்பு நிகழ்வுகளுக்கு சமையல் செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை சமைத்துக் கொண்டார்கள். அந்த கிராமத்தை வெளியிலிருப்பவர்கள் ‘சமைப்பவர் கிராமம்’ என்றே அழைக்கிறார்கள்.

அவ்வூரின் பெரும்பாலான மக்கள் நிலமற்ற ஏழைகள். சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களில் நாற்று நட்டும், அறுவடை செய்தும் வந்தனர். இயற்கையோடு நிகழ்த்தும் சூதாட்டமாக வேளாண்மை வெளிறிப்போனது. அவர்களுக்கு வயிற்றைக் கழுவவே வாய்ப்பில்லாதபோது அடுத்தவர்கள் வயிற்றை நிரப்பும் பணிக்கான வாய்ப்பு வந்தது.

இது மாயாஜாலம்போல் நிகழவில்லை. இம்மாற்றம் நிகழ இரண்டு தலைமுறைகள் போராடின. அடுத்தவர்களை நம்பு வதைவிட, இயற்கையைப் பழிப்பதைவிட இருப்பதை வைத்து பிழைப்பதே மேல் என்று தீர்க்கமாக முடிவு செய்தார்கள். பட்டதாரி இளைஞர்களும் இப்பணியை மகிழ்ச்சியாக இப்போது மேற்கொள்கிறார்கள்.

இப்போது அவர்கள் வாழ்வில் வறுமை இல்லை. பசியோடு இருந்த அவர்களால் அடுத்தவர் பசியையும் அகற்ற முடிகிறது. இதில் நிறைய பேர் இரண்டாம் தலைமுறை சமையலர்கள். அப்பாக்கள் கற்றுக்கொடுக்க மகன்கள் பெற்றுக்கொண்ட கலையால் ஊருக்கு மாநிலம் முழுவதும் பெருமை. வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல் அரசியல் மாநாடுகளுக்கும் அவர்கள் சமைக்கச் செல்கிறார்கள்.

இப்போது அவர்கள் தேதி கிடைப்பது அரிது. நிகழ்வைப் பொருத்து பதினைந்து முதல் இருபது வரை ஆண் சமையல் காரர்கள் செல்கிறார்கள். மொத்தம் நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் வரை ஊதியம். அதைப் பகிர்ந்துகொள்கிறார்கள். தலைமைச் சமையலர் சிறப்பு நிகழ்வுகளில் பத்தாயிரம் வரை சம்பளம் வாங்குகிறார்.

இவர்களில் யாரும் சமையலுக்கான கல்லூரிகளில் படிக்கவில்லை. பயிற்சியால் பதப்பட்டவர்கள். சில முகூர்த்தக் காலங்களில் வீட்டைவிட்டு பல நாட்கள் அவர்கள் முகாம் செல்வதுண்டு. சமையலுக்குத் தேவையான உபபொருட் களைப் பெண்கள் வீட்டிலிருந்தபடியே தயாரிக்கிறார்கள்.

‘இதயத்தில் நெருப்பு இருந்தால் எந்த இருட்டையும் கிழிக்கலாம்’ என்பதே கொன்றஹல்லி பற்றிய செய்தி தரும் சேதி.

(செய்திகள் தொடரும்)

மூளையின் அளவு பெரிதானது ஏன்?

மனிதர்களுக்கு 100 பில்லியன் நியூரான்கள். ஒரு பில்லியன் என்பது 100 கோடி. சிம்பன்சிகளுக்கு இருந்த மூளையைப்போல நமக்கு மூன்று மடங்கு. இவ்வளவு பெரிய மூளை ஏற்பட்டதற்கு சமைத்துச் சாப்பிடுவதே காரணம்.

சமைப்பது நாம் சாப்பிடும் நேரத்தைக் குறைக்கிறது. உணவைச் சமைக்கும்போது அவை மென்மையாகின்றன. மெல்வது எளிது. உள்ளே சென்றதும் வாயில் கொழகொழவென்று உருமாறி உடம்போடு ஐக்கியமாகி விடுகிறது. குடல்களின் நீளம் குறைந்து ஜீரணத்திற்குத் தேவைப்படும் ஆற்றல் குறைந்ததால் அது சேமிக்கப்பட்டு மூளையின் அளவு பெரிதாக உதவியது. சமைப்பதால் மிச்சமான நேரம் எப்போதும் உணவைப்பற்றிச் சிந்திப்பதிலிருந்து நமக்கு விடுதலை கொடுத்தது.

மேலும் செய்திகள்