நீல திமிங்கலத்துக்கு இரையாவதை தடுப்போம்

‘புளுவேல்’ எனும் நீல திமிங்கலம் என்ற ஆன்-லைன் விளையாட்டு தான் தற்போது அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Update: 2017-09-03 05:00 GMT
‘புளுவேல்’ எனும் நீல திமிங்கலம் என்ற ஆன்-லைன் விளையாட்டு தான் தற்போது அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தங்களது குழந்தைகள் மீதான அக்கறையை தற்போது தான் பெற்றோர்கள் அதிகப்படுத்தி உள்ளனர்.

எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கும் குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பதை பெற்றோர்கள் சமீபகாலமாக செய்ய தவறி விட்டனர்.

தங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் அமைதியாக ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருந்தால் போதும் என்ற பெற்றோர்களின் எண்ணத்தால் அனைத்து குழந்தைகளின் கைகளிலும் செல்போன் புகுந்து விளையாடுகிறது.

செல்போனில் குழந்தைகள் விளையாடும் சாதாரண விளையாட்டுகளே அவர்களை மனதளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது செல்போன் மூலம் விளையாடும் ஒரு விளையாட்டில் ஒரு கட்டத்தை தாண்டி விட்டால் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டியே தீர வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான குழந்தைகள் மனதில் பதிந்து விடுகிறது.

விளையாட்டுகளில் அடுத்தடுத்த கட்டங்களை தாண்ட வேண்டும் என்று குழந்தைகள், இளையதலைமுறையினரின் ஆழ்மனதில் பதிந்த எண்ணமே புளுவேல் போன்ற விபரீத விளையாட்டுக்களில் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை புகுத்தி விடுகிறது என்பது தான் உண்மை.

செல்போனில் தங்களது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சாதாரண விளையாட்டுத்தானே, இதனால் என்னவாகப்போகிறது என்று சாதாரணமாக கருதிய பெற்றோர் களின் தலையில் தற்போது பெரிய இடி விழுந்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் செல்போனை அதிகநேரம் பயன்படுத்தி வரும் தங்களது குழந்தைகள் எதுபோன்ற மனநிலையில் இருக்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

அதாவது, புளுவேல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் மேற்கொள்ளும் வழக்கத்துக்கு மாறான செயலை செய்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டியது உள்ளது. அதாவது, தங்களது குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக ஆடை அணிகிறார்களா, தலைமுடியை மாற்றி அமைக்கிறார்களா, யாரிடமும் பேசாமல் தனிமையை அதிகம் விரும்புகிறார்களா, அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்து ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்களா, படிப்பது போன்று அமர்ந்து கொண்டு வேறு சிந்தனையில் இருக்கிறார்களா என்பது போன்றவற்றை மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழலில் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தங்களது குழந்தைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

ரகசியம் காக்கப்பட வேண்டிய சில தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிரும்போது என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதைக்கூட முழுமையாக அறியாமல் இளையதலைமுறையினர் விளையாட்டாக தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களது புகைப்படங்களை இளம்பெண்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றில் சக நண்பர் களுக்கு பகிர்ந்து கொள்கின்றனர். இப்படி அனுப்பப்படும் புகைப்படங்கள் பல நேரங்களில் முகம் தெரியாத மூன்றாவது நபருக்கு சென்றடைகிறது. அவர்கள் இந்த புகைப்படங்களை 100 சதவீதம் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

செல்போன் என்பது அவசர தொடர்புக்கு மட்டுமே என்ற சூழலை குழந்தைகளுக்கு கட்டாயம் ஏற்படுத்தினால் மட்டுமே தற்கொலை போன்ற விபரீதங்களில் இருந்து விடுதலையாக முடியும். முதலில், இதற்கு ஒவ்வொரு பெற்றோரும் முன்வர வேண்டும்.

அதாவது, தேவையான விஷயங்களை மட்டுமே செல்போன் மூலம் பகிர்ந்து கொள்வோம் என்ற உறுதியான முடிவை பெற்றோர் எடுக்க வேண்டும்.

புளுவேல் போன்ற விளையாட்டுகள் மூலம் இனியும் நம்மில் ஒரு தோழனை, தோழியை இழக்க விரும்பவில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை இளையதலைமுறையினர் எடுக்க வேண்டும்.

இதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் முழுமையாக ஈடுபாடு காட்ட வேண்டும். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள் புளுவேல் போன்ற விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு தைரியத்தை கொடுத்து அதில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.

இவ்வளவு நாட்கள் செல்போனை சர்வ சாதாரணமாக குழந்தைகளின் கைகளில் கொடுத்து விட்டு தற்போது உடனடியாக பறிப்பது என்பதும் அவர்களுக்கு மனதளவில் சற்று பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

தற்போதுள்ள சூழ்நிலையை குழந்தைகளிடம் புரியவைத்து கொஞ்சம், கொஞ்சமாக செல்போன் விளையாட்டு மோகத்தில் இருந்து குழந்தைகளை அடுத்த விஷயங்களுக்கு அழைத்துச் செல்வதே சரியாக இருக்கும்.

- டாக்டர் விதுபாலா, மனோதத்துவ நிபுணர்.

மேலும் செய்திகள்