கோவில்பட்டியில் அட்டை குடோன்-பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து

கோவில்பட்டியில் அட்டை குடோன்-பர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.;

Update: 2017-09-02 23:40 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 40). இவர் கோவில்பட்டி-இளையரசனேந்தல் ரோட்டில் சொந்தமாக கட்டில், பீரோ, நாற்காலி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள்(பர்னிச்சர்) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலையின் பின்பகுதியில் கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேஷ்பாண்டியனுக்கு(31) சொந்தமான பழைய அட்டை குடோன் உள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த பழைய அட்டை குடோனில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள பர்னிச்சர் தொழிற்சாலைக்கும் தீ பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பர்னிச்சர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சோபா, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களும், பழைய அட்டை குடோனில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய அட்டைகளும் எரிந்து சேதம் அடைந்தன.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்