குமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா பக்தர்கள் பரிகார பூஜை செய்து வழிபாடு

குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

Update: 2017-09-02 23:05 GMT
சுசீந்திரம்,

குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை 6.39 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

இதையொட்டி குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. கோவிலில் முதல் கடவுளாக திகழும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.

குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையால் ஆன மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள்நிற துண்டு, முல்லைப்பூ மாலை அணிவித்து தீப வழிபாடு மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர். மேலும், பரிகார பூஜைகளும், லட்சார்ச்சனைகளும் செய்து வழிபட்டனர்.

பெண்கள் விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரே, நேற்று அதிகாலையில் 2-ம் கால ஹோம பூஜை நடந்தது. பக்தர்கள் ஹோமங்களில் உள்ள பிரசாதங்களை தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

லட்சார்ச்சனை விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தில் லட்டு, வடை, தேங்காய் பழம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதைப்போல் சுசீந்திரம் தாலகுளம் பிள்ளையார் கோவில், தளியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோவில் மற்றும் குமரிமாவட்டத்தில் குருபகவான் சன்னதி உள்ள அனைத்து கோவில்களிலும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்