தோகைமலை அருகே வங்கி ஊழியர் கொலை வழக்கில் காவலாளிகள் 2 பேர் கைது

தோகைமலை அருகே வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவலாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-02 22:26 GMT
தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள பண்ணப்பட்டி- காணியளம்பட்டி சாலையோரத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி சுமார் 60 வயது முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், ஆனந்தி, நடேசன், உளவுப்பிரிவு ஏட்டுகள் குமரவேல், முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கிடந்த நபரின் சட்டை காலரில் நாமக்கல்லை சேர்ந்த ஒரு டெய்லர் கடையின் முகவரி இருந்தது. இதனால் தனிப்படை போலீசார் நாமக்கல்லை மையமாக வைத்து கொலையுண்ட நபரின் உருவப்படம் மற்றும் அங்க அடையாளங்களை சமூக வலைதளங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், கொலையுண்டதாக போலீசார் வெளியிட்ட உருவப்படம் தனது தந்தை போல் இருப்பதாக தனிபடை போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் சுப்பிரமணியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்று கொலையுண்ட நபரின் உடலை காட்டினர். அப்போது கொலையுண்ட நபர் தனது தந்தை பங்காருசாமி என்று கூறினார். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணையில் இறந்த நபர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் வசித்த பங்காருசாமி என்றும், அவர் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

பின்னர் இதுதொடர்பாக தனிபடை போலீசார் பங்காருசாமியின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு அதிக நேரம் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த செந்தில்குமார்(வயது 40), இவரது நண்பர் மாயனூர் அருகே உள்ள வெண்ணிலை கிராமத்தை சேர்ந்த பாலுசாமி(42) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில்குமாரும், பாலுசாமியும் கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தனர். செந்தில்குமாருக்கும், பங்காருசாமிக்கும் தங்க நகைகள் அடகு வைப்பது மற்றும் புதிதாக செய்து கொடுப்பதில் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் பங்காருசாமிக்கும், செந்தில்குமாருக்கும் வரவு- செலவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தனது நண்பர் பாலுசாமியுடன் சேர்ந்து கடந்த மாதம் 26-ந் தேதி பங்காருசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.

மேலும் செந்தில்குமார், பாலுசாமியை தனிபடை போலீசார் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தோகைமலை அருகே வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டு ஒரே வாரத்தில் கொலையாளிகளை கைது செய்த தனிபடை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்