மாணவி அனிதா தற்கொலை விவகாரம்: பல்வேறு அமைப்புகள் மறியல்; 291 பேர் கைது மோடியின் உருவ பொம்மை எரிப்பு

புதுவையில் விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மறியலில் ஈடுபட்ட 291 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-03 01:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். அங்கு அவர்கள் மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 111 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், இளைஞரணி தலைவர் சிவமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த மோடியின் உருவ பொம்மையை வெளியே எடுத்து தீ வைத்து கொளுத்தினர்.

உடனே அங்கு இருந்த போலீசார் அந்த உருவ பொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் நேற்று காலை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பாளர் தந்தை பிரியன், மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன், அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பாவாடைராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு 93 பேரை ஒதிஞ்சாலை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அப்போது கடற்கரை சாலையில் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு 27 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் மாணவர்கள் கூடுவதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 20க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கூடி நின்றனர். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர். அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அவர்களை எச்சரித்தனர். விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று நடந்த மறியல் போராட்டங்களில் புதுவையில் மொத்தம் 291 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்