நீல திமிங்கல விளையாட்டால் தற்கொலை: பல்கலைக்கழக மாணவரின் உடல் தந்தையிடம் ஒப்படைப்பு

நீல திமிங்கல விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட பல்கலைக்கழக மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2017-09-03 01:30 GMT

புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டு பல்கலைக்கழகத்தில் அசாம் மாநிலம் ஜமாஜி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் போரா என்பவரது மகன் சசிகாந்தா போரா (வயது 23) எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கண்ணதாசன் மாணவர் விடுதியில் தங்கி படித்தார்.

இந்த நிலையில் கடந்த 31–ந் தேதி நள்ளிரவில் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்–இன்ஸ்பெக்டர் இளமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவர் சசிகாந்தா போரா நீல திமிங்கல விளையாட்டில் மூழ்கி இருந்தது தெரியவந்தது. எனவே இந்த விளையாட்டுக்கு அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் மாணவர் சசிகாந்தா போராவின் தந்தை ராம்குமார் போரா மற்றும் உறவினர்கள் நேற்று காலை புதுவை வந்தனர். அவர்களிடம் காலாப்பட்டு போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களை மாணவரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பின் சசிகாந்தா போராவின் உடல் அவரது தந்தை மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இறுதி சடங்கு செய்வதற்காக மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்து புதுவையில் இருந்து சென்னைக்கு வாகனம் மூலம் கொண்டு சென்றனர். அங்கிருந்து சசிகாந்தாவின் உடலை விமானம் மூலம் அசாம் கொண்டு சென்றனர்.

புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவர் சசிகாந்தா போரா நீல திமிங்கல விளையாட்டில் ஆர்வம் காட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த உண்மை தன்மையை அறிய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

ஆனால் அதில் நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அறிய ஆய்வுக்காக சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) தெரியாமல் அந்த செல்போனை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மாணவர் சசிகாந்தா போராவின் கைவிரல் ரேகையை பயன்படுத்தி பார்த்தும், அவருடன் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் விசாரித்ததை வைத்தும் செல்போனை போலீசார் இயக்க முயன்றபோது முடியாமல் போனது.

இதனால் அவர் நீல திமிங்கல விளையாட்டில் சிக்கி உள்ளாரா? என்பதை திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மேலும் நிபுணர்கள் மூலம் அந்த செல்போனை இயக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்