பெரம்பூர் அருகே சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் தற்கொலை

பெரம்பூர் அருகே, சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-09-02 23:00 GMT
பெரம்பூர்,

சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர், தீட்டிதோட்டம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். அ.தி.மு.க. பிரமுகர். இவருடைய மனைவி உஷா(வயது 45). இவர், சென்னை மாநகராட்சி 68-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த ஆண்டு பெருமாளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயல் இழந்தநிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.

உஷாவுக்கும், அவருடைய கணவர் குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி பெருமாள் குடும்பத்தினர் உஷாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த உஷா, கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் எங்கோ வெளியே சென்று விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பே அவரே வீட்டுக்கு திரும்பி வந்தார். மீண்டும் அவரிடம் கணவர் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த உஷா, நேற்று காலை தனது அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செம்பியம் உதவி கமிஷனர் அர்னால்டு ஈஸ்டர், திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் தற்கொலை செய்த உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த மடிக்கணினியில் ஆராய்ந்த போது அதில், உஷா தற்கொலை செய்வதற்கு முன்பாக பேசிய வீடியோ அதில் இருப்பது தெரிந்தது.

அதில் உஷா, “எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. கட்சி பதவி மற்றும் கவுன்சிலர் பதவி வகித்து வந்தேன். ஆனால் குடும்பத்தில் நிம்மதி இல்லை. பல கொடுமைகளை அனுபவித்து வந்தேன். என் குடும்பத்தினர் எனக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்தனர். இதனால் மனமுடைந்த நான் வீட்டை விட்டு வெளியே சென்றேன். ஆனால் இதை பலர் பலவிதமாக பேசுவார்கள் என்பதால் மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டேன்” என்று அந்த வீடியோ காட்சியில் உஷா கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்