மாணவி அனிதா தற்கொலை: விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் மாணவி அனிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-09-02 22:30 GMT

ஆவடி,

எனவே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை புறநகர் பகுதியில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி புதிய ராணுவ சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆவடி நகர செயலாளர் பிரீஸ் பன்னீர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஆவடி போலீசார் சமரசம் செய்து வைத்தனர். முன்னதாக புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தி நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்தையும், தற்கொலை செய்த மாணவி அனிதாவின் உருவ படத்தையும் திறந்து மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம், சண்முகம் சாலையில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் தேவா அருள் பிரகாசம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பொற்செழியன், சாமுவேல் உள்பட 150–க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.


மேலும் செய்திகள்