குண்டலுபேட்டை டவுனில் விபத்து மோட்டார் சைக்கிள் – லாரி மோதல்; வியாபாரி படுகாயம்

குண்டலுபேட்டை டவுனில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-09-02 20:00 GMT

கொள்ளேகால்,

குண்டலுபேட்டை டவுனில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம் அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

விபத்து

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுன் மகாதேவ பிரசாத் நகரைச் சேர்ந்தவர் ஜபருல்லா(வயது 35). வியாபாரியான இவர் நேற்று குண்டலுபேட்டை டவுன் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒரு லாரி, எதிர்பாராத விதமாக ஜபருல்லாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜபருல்லா படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும், லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி முஸ்லிம் அமைப்பினர் ஆத்திரம் அடைந்தனர். உடனே அவர்கள் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும், படுகாயம் அடைந்த ஜபருல்லாவுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரி குண்டலுபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் தடியடி

இதுகுறித்து அறிந்த குண்டலுபேட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முஸ்லிம் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளும் உருவானது.

இதையடுத்து போலீசார் முஸ்லிம் அமைப்பினர் மீது லேசான தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து போலீசார் ஜபருல்லாவை மீட்டு சிகிச்சைக்காக குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

இந்த விபத்து குறித்து குண்டலுபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்