பெங்களூருவில் தாம்பத்யத்துக்கு மறுத்த மனைவிக்கு அடி-உதை கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது போலீசில் புகார்

பெங்களூருவில், தாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து உதைத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-09-02 21:00 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், தாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து உதைத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் என்ஜினீயரின் தொல்லை

பெங்களூரு தனிச்சந்திராவில் வசித்து வருபவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பின்னர், அவர்களின் வாழ்க்கையில் தாம்பத்யம் தொடர்பாக பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது.

தினமும் காலையில் கண்விழிக்கும் கம்ப்யூட்டர் என்ஜினீயர், தனது மனைவியை தாம்பத்யத்துக்கு அழைத்துள்ளார். பின்னர், காலை உணவு முடித்தவுடன், மாலை மற்றும் இரவு என தொடர்ச்சியாக அவர் தனது மனைவியை தன்னுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளார்.

போலீசில் புகார்

தொடர்ச்சியாக தாம்பத்யத்துக்கு அழைத்ததால் கணவர் மீது அந்த பெண் வெறுப்பு அடைந்ததாக தெரிகிறது. சில வேளைகளில், தாம்பத்யத்துக்கு அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, கணவரான கம்ப்யூட்டர் என்ஜினீயர், அவரை அடித்து, உதைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செயலுக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரின் பெற்றோர், தங்கை உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இதனால், மனம் உடைந்த அந்த பெண் தனது கணவர் மீதும், அவருடைய குடும்பத்தினர் மீதும் பையப்பனஹள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாம்பத்ய விவகாரம் தொடர்பாக கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது அவருடைய மனைவியே போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்