மாணவி அனிதா சாவுக்கு நியாயம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெற முடியாததால் மருத்துவக்கல்லுரியில் சேர முடியாத நிலையில் விரக்தியடைந்த அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
கலசபாக்கம்,
‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெற முடியாததால் மருத்துவக்கல்லுரியில் சேர முடியாத நிலையில் விரக்தியடைந்த அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாநில முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் தங்கமணி தலைமையில், மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தி.மு.க. மாணவரணி சார்பில் மாணவி அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருவண்ணாமலையில் உள்ள காந்தி சிலை அருகில் மெழுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மாணவரணியினர் கிரிவல பாதையில் காமராஜர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை ஊர்வலமாக வந்தனர். இதில் நகர தி.மு.க.செயலாளர் கார்த்திக் வேல்ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணாதுரை, மாணவரணி அமைப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலசப்பாக்கம் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.