விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது பரிதாபம் குளத்தில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு

பிரியப்பட்டணா அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது குளத்தில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-09-02 20:30 GMT

மைசூரு,

பிரியப்பட்டணா அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது குளத்தில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

விநாயகர் சிலை கரைப்பு

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 25–ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா வி.ஜி.கொப்பலு கிராமத்தில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை அந்தப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கிராமத்தின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தில் கரைப்பதற்காக அந்தப்பகுதி மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பின்னர் கிராமத்தின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தில் அந்த விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த 10 பேர் குளத்துக்குள் இறங்கினார்கள்.

2 வாலிபர் சாவு

அந்த சமயத்தில், மஞ்சுநாத் (18), மது (27) ஆகியோர் திடீரென்று குளத்து நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள், அவர்களை மீட்க முயன்றனர். ஆனாலும், அதற்குள் 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பிரியப்பட்டணா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினர் உதவியுடன் குளத்தில் கிடந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பிரியப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்

இதுகுறித்து பிரியப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் 2 வாலிபர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்