மாணவி அனிதா தற்கொலை மோடி உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

மாணவி அனிதா தற்கொலைக்கு நியாயம் கேட்டு விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-02 23:15 GMT

திருவண்ணாமலை,

‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலையில் விரக்கி அடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது சாவுக்கு நியாயம் கேட்டும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் திருவண்ணாமலை பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன் தலைமை தாங்கினார். அப்போது பஸ் நிலையத்திற்குள் செல்ல முயன்ற அரசு பஸ்சை அவர்கள் மறித்து தரையில் அமர்ந்தனர். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து நில அகபரிப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அவர்கள் மறைத்து வைத்து இருந்த பிரதமரின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்று திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைந்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்