பெங்களூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
பெங்களூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
பெங்களூரு,
பெங்களூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டது.
வரலாறு காணாத மழைபெங்களூருவில் கடந்த மாதம்(ஆகஸ்டு) வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை கொட்டியது. அதாவது 127 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் தான் கனமழை பெய்திருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் இருந்து விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதனால் கோரமங்களா, எச்.எஸ்.ஆர். லே–அவுட், பன்னரகட்டா, கே.ஆர்.புரம், பெங்களூரு புறநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
குறிப்பாக கொட்டிகெரேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் நேற்று முன்தினம் மிகுந்த சிரமப்பட்டு வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினார்கள். அதுபோல, அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீரும் மெல்ல, மெல்ல வடிந்த வண்ணம் இருந்தது. என்றாலும், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது.
விடிய, விடிய பெய்த மழைஇந்த நிலையில், பெங்களூருவில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாது விடிய, விடிய நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த வண்ணம் இருந்தது. அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் பெங்களூரு நகர் முழுவதும் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது. பாதாள சாக்கடைக்கு மேலே ஆங்காங்கே சாலைகளின் மீது போடப்பட்டு இருந்த மூடிகளை பெயர்த்து விட்டு கழிவுநீர் வெளியேறி கரை புரண்டு ஓடியது.
அதிகாலையில் இருந்து இரவு வரை பெய்த மழையால் கோரமங்களா, பன்னரகட்டா, உளிமாவு, மைகோ லே–அவுட், மடிவாளா, சாந்திநகர், வில்சன்கார்டன், எச்.எஸ்.ஆர். லே–அவுட், பேகூர், கொட்டிகெரே, சாம்ராஜ்பேட்டை, ராஜாஜிநகர், மல்லேசுவரம், இந்திராநகர், விதானசவுதா, வசந்த்நகர் உள்ளிட்ட பெங்களூரு நகரமே வெள்ளக்காடாக மாறியது. அங்குள்ள சாலைகளிலும், வீடுகளை சுற்றியும் குளம் போல மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதிகளில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நின்றதை காணமுடிந்தது. மழை விடாமல் பெய்ததால் தண்ணீர் வடிய வழியே இல்லாமல் போனது.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்இதனால் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. குறிப்பாக கோரமங்களா, எச்.எஸ்.ஆர். லே–அவுட் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வாகன நிறுத்தும் இடத்தில் தண்ணீர் புகுந்ததால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. நேற்று முன்தினம் அதே குடியிருப்புகளில் மழைநீர் புகுந்திருந்தது. அந்த தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம், அங்கு வசிப்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வெளியேற்றி இருந்தார்கள். இந்த நிலையில், நேற்றும் அங்கு மழைநீர் புகுந்ததால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இதுதவிர கொட்டிகெரே, பீனியா, உளிமாவு, சாந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் நேற்று அதிகாலையில் தூங்க முடியாமல் பரிதவித்தார்கள். சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் பணிமனைக்குள் தண்ணீர் புகுந்ததால், பஸ்களை வெளியே எடுக்க முடியாத நிலை உண்டானது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 14 மற்றும் 15–ந் தேதிகளில் பெய்த மழையின் போது பணிமனைக்குள் தண்ணீர் புகுந்ததுடன், போக்குவரத்து கழகத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருந்தது.
போக்குவரத்து நெரிசல்மேலும் நகரின் பெரும்பாலான சாலைகளில் உள்ள சுரங்க பாதைகளில் 4 முதல் 5 அடிக்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த சுரங்க பாதைகளில் பீதியுடனே வாகன ஓட்டிகள் சென்றார்கள். அதே நேரத்தில் முதல்–மந்திரி சித்தராமையாவின் அலுவலகம் அமைந்துள்ள குமாரகிருபா சாலை அருகே உள்ள சுரங்க பாதையிலும், வசந்த்நகரில் உள்ள சுரங்க பாதையிலும் தண்ணீர் வடிய வாய்ப்பே இல்லாமல் தேங்கி நின்றதால், அந்த சுரங்க பாதைகள் வழியாக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்து இருந்தார்கள்.
நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழைநீர் கரைபுரண்டு ஓடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் முன், பின் நகர முடியாமல் அப்படியே நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதே நேரத்தில் மழை காரணமாக கோரமங்களா, இந்திராநகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து கிடந்ததாலும் அங்கு போக்குவரத்து நெரிசல் உண்டானது.
ஏரியில் உடைப்புகனமழையின் காரணமாக பேகூர் ஏரியின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வெளியேறி அங்குள்ள சாலைகளில் கரை புரண்டு ஓடியது. மேலும் ஏரியையொட்டி உள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு வசிப்பவர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்தார்கள். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று உடைப்பை சரி செய்யும் பணியை முடுக்கி விட்டார்கள். அதன்பிறகு, நேற்று மாலையில் ஏரியில் உண்டான உடைப்பு சரி செய்யப்பட்டது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு மேயர் பத்மாவதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, வீடுகளை சூழ்ந்திருந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள். மேலும் தீயணைப்பு படைவீரர்களும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் நகரில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
இயல்பு வாழ்க்கை பாதிப்புஇந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகராட்சி மேயர் பத்மாவதி நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். பேகூர் ஏரியில் ஏற்பட்ட உடைப்பையும் மேயர் பத்மாவதி பார்வையிட்டார். இதற்கிடையில், மழை பெய்யும் போது எல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், மாநகராட்சியின் அலட்சியத்தால் தான் இதுபோன்று ஏற்படுவதாகவும் கூறி மேயர் பத்மாவதியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று அரசு விடுமுறை என்றாலும், மழையின் காரணமாக நேற்று பெங்களூரு நகரவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக பெங்களூருவில் நேற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.