மாணவி அனிதா தற்கொலை சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்: டி.ராஜா பேட்டி

நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

Update: 2017-09-02 23:00 GMT

சிவகங்கை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

 தமிழகத்தில் நீட் தேர்வினால் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவத்தை தற்கொலையாக பார்க்கக் கூடாது. மத்திய, மாநில அரசின் தவறான கொள்கையால் நடைபெற்ற கொலையாகத்தான் பார்க்க வேண்டும். எனவே மத்திய, மாநில அரசு இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஏற்கனவே நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு கோரி நான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளேன். நமது கல்விக்கு மத்திய, மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த தற்கொலைக்கு பின்னராவது நமது கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்று தொலை நோக்குடன் முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசை கேள்வி கேட்டு போராட வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. கட்சியை வளர்க்க பாடுபட்டு வருகிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை பா.ஜ.க. பயன்படுத்தி கொள்கிறது. இந்த மாநில அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் முதல்–அமைச்சர் மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தபின் இது உள்கட்சி பிரச்சினை என்று கவர்னர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல.

எனவே இது குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை சட்டமன்றம் அல்லது பாராளுமன்றத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். அதன்படி தமிழக சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். நாங்கள் ஜனாதிபதியிடம் இது பற்றி கூறியிருக்கிறோம். அவர் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளோம். மத்திய அரசு அமைச்சரவையில் மாற்றம் நடைபெற உள்ளது. மோடி பிரதமர் ஆன பின்பு இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுஉள்ளது. இது ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தரப்படும் என்றும் ஊழலை ஒழிப்போம் என்றும், கறுப்பு பணத்தை மீட்போம் என்று மோடி தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார். ஆனால் தற்போது எதுவும் நடைபெறவில்லை. மக்களின் சிறு சேமிப்பு தான் வங்கிக்கு வந்துள்ளது. மற்றப்படி கருப்புபணம் எதுவும் வரவில்லை. விவசாயம் மற்றும் தொழில் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுஉள்ளது. மோடி அரசின் சாதனை அமைச்சரவை மாற்றம் தான்.

எனவே தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 15–ந் தேதி முதல் அக்டோபர் 15–ந் தேதி வரை மோடி அரசின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட உள்ளது. பெட்ரோலிய பொருட்கள் கியாஸ் விலைகளை நிறுவனங்களே நிர்ணயிக்கிறது. இதனால் மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். உள்ளாட்சி தேர்தலை உரிய முறையில் நடத்தப்பட வேண்டும். இது தமிழகத்தின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவது அடிமட்ட மக்களின் உரிமையாகும். இதை மறுக்கக்கூடாது. இது பற்றி வருகிற 13 மற்றும் 14–ந்தேதி நடைபெற உள்ள மாநில கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் சந்திரன், நகர் செயலாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்