பழைய பாலத்தைச் சீரமைக்க சொத்தை விற்ற இருவர்

ரஷியாவில் ஒரு பழைய பாலத்தைச் சீரமைக்க தங்கள் சொத்துகளை விற்ற இருவர், வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

Update: 2017-09-02 11:15 GMT
ஷியாவில் ஒரு பழைய பாலத்தைச் சீரமைக்க தங்கள் சொத்துகளை விற்ற இருவர், வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் அமைந் திருக்கும் குறிப்பிட்ட, சேதமடைந்த தொங்கும் பாலத்தைச் சீரமைக்க, தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு, கார், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை அவர்கள் விற்றிருக்கின்றனர்.

ரஷியாவின் அல்டாய் மலைப் பகுதியில் அமைந்திருக்கும் அந்த தொங்கு பாலம், 2014-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரிதும் சேதம் அடைந்தது.

அதன்பிறகு பராமரிப்பற்ற நிலையில் இருக்கும் அந்தப் பாலத்தைச் சீர் செய்ய யூரி வாசில்யேவ்- எவ்கெனி லெவின் என்ற இருவர் பெரு முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த மூன்றாண்டுகளில் அந்தப் பாலத்துக்காக ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கின்றனர்.

அந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகளில் பெரும் பகுதியைத் தாங்களாகவே செய்த அவர்கள், அவ்வப்போது உள்ளூர்வாசிகளிடமும் ஆலோசனை கேட்டிருக்கின்றனர். ஒரு கட்டுமான நிறுவனத்தைக்கொண்டும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

கட்டூன் நதியின் குறுக்கே அமைந்துள்ள அந்தப் பாலம், தனியாருக்குச் சொந்தமானதாகும். அதன் முந்தைய உரிமையாளர் சொத்துகளை இழந்து திவாலாகிப் போனபின்பு, அதைக் கவனிக்க யாரும் இல்லாமல் போனது.

“அதைப் பார்க்கவே மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் பாலத்துக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. அது பராமரிப்பின்றி இருப்பது வருத்தத்துக்குரியது. அல்டாய் நகர கட்டிடக் கலையின் ஒரு முக்கியமான அடையாளம் அப்பாலம். அதனால், அதைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்தோம்” என்று செய்தியாளர்களிடம் யூரி வாசில்யேவ் கூறினார்.

பாலச் சீரமைப்பில் இவர்கள் இவ்வளவு தீவிரமாக இருந்த போதிலும், இவர்களால் பாலத்தை முழுமையாகச் சீரமைக்க முடியவில்லை.

கடந்த காலங்களில் வாகனப் போக்குவரத்து மேற்கொள்ளும் அளவுக்கு வலிமையாக இருந்த அந்தப் பாலம், தற்போது பாதசாரிகள் செல்லும் அளவுக்குத்தான் வலிமை பெற்றுள்ளது.

ரஷியாவின் சமூக வலைதளப் பயனாளர்கள் இவர்களின் பணி குறித்து இரு மாதிரியான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ஒரு தரப்பினர், அவர்கள் சிறப்பான பணி செய்வதாகவும், மற்றவர்கள், அவர்கள் செய்வது வீண் வேலை என்றும் கருத்துக் கூறுகின்றனர்.

சிலர் அவர்களின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர். ஒரு விமர்சகர், ‘ஆம். அது ஒரு சகாப்தம், வரலாறு. அது ஒரு பாலம் மட்டுமல்ல, தங்கப் பானை’ என்று கிண்டலாக, அதன்மூலம் அவர்களுக்கு ஏதேனும் பணம் ஈட்டும் நோக்கம் இருக்கலாம் என்று மறைமுகமாக எழுதியுள்ளார். சிலரோ அவர்களைப் பாராட்டி எழுதியுள்ளனர். ‘அவர்களைப் போன்ற தங்கமான மனிதர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்று ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், பணத்தாசையால் தாங்கள் இப் பணியை மேற்கொள்ளவில்லை என்று யூரி வாசில்யேவும் எவ்கெனி லெவினும் கூறியுள்ளனர்.

“எனக்குப் பணம் முக்கியமல்ல. பயனுள்ள ஒரு செயலைச் செய்வதுடன், நம் மண்ணின் வரலாற்றை மக்களுக்குச் சொல்லவே நான் விரும்பு கிறேன்” என்று வாசில்யேவ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்