குண்டூசி முதல் யானை வரை... இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை கதை

ஒரு பெரிய குடும்பத்தின் பாகப்பிரிவினை போலத்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை இருந்தது.

Update: 2017-09-02 12:30 GMT
ரு பெரிய குடும்பத்தின் பாகப்பிரிவினை போலத்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை இருந்தது.

ஒரு பெரும் தேசம், ஆங்கிலேய வக்கீல் ராட்கிளிப் போட்ட கோட்டால் ஒரே நாளில் இரு நாடுகளாகிவிட்டது.

பிரிவினையில் பல சோகங்களைப் போல சில சுவாரசியங்களும் இருந்தன. சொத்துகளைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக இரு நாடுகளும் மல்லுக்கட்டின.

குறிப்பாக, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புராதன ஆபரணத்தின் ஒரு பகுதி இந்தியாவுக்கும், மறுபகுதி பாகிஸ்தானுக்கும் கிடைத்தன.

இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் அனைத்தும் ஒன்றாக இருந்தன. சொத்துகளும் அதுபோலத்தான்.

ஒரு நாடு, இரு நாடுகளாக மாற, நிலங்களும், பிராந்தியங்களும் பிரிக்கப்பட வேண்டியது அவசியமானது. எல்லையைப் போல சொத்துகளும் பிரிக்கப்பட்டன.

நம்பமுடியாத வகையில், குண்டூசி, பென்சில், நாற்காலிகள் முதல், அரசின் வசமிருந்த கால்நடைகள் வரை அனைத்தும் விகிதாச்சாரப்படி பிரித்து ‘செட்டில்’ செய்யப்பட்டன.

சொத்துகளைப் பிரிப்பது என்றாலே சர்ச்சைகளும் எழத்தானே செய்யும்? அதேபோல, சிந்து சமவெளி நாகரிகத்தின் மையமான மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட புராதன ஆபரணத்தைப் பிரிப்பது பற்றி பிரச்சினை எழுந்தது.

சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது, 1920-ல். அப்போது இந்தியா பிளவுபடாதிருந்தது.

மனித நாகரிகத்தை அறிந்துகொள்ளப் பேருதவியாக இருந்த மொகஞ்சதாரோ நகரம், சிந்து சமவெளி நாகரிக காலத்தைச் சார்ந்தது என்று கண்டறியப்பட்டது.

எகிப்து, கிரேக்கம் மற்றும் சீன நாகரிகங் களைப் போல இந்திய நாகரிகமும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் புராதனமானது என்பதை அந்த அகழ்வாய்வு நிரூபித்தது.



இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, தனது புகழ்பெற்ற ‘நான் கண்டுணர்ந்த இந்தியா’ புத்தகத்தில் மொகஞ்சதாரோ பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

மொகஞ்சதாரோ, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய நாகரிகத்துக்குச் சாட்சியாக இருப்பதாகவும், காலப்போக்கில் அது மாறியிருப்பதாகவும் நேரு கூறுகிறார்.

நடனமாடும் பெண்ணின் சிலை, தியானம் செய்யும் பூசாரியின் உருவச்சிலை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருட்கள் மொகஞ்சதாரோ அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை முழுமையாக இல்லை என்பது ஒரு சோகம்.

அகழ்வில் கிடைத்த முக்கியமான பொருட்களில் ஒன்று, தங்கத்தால் ஆன ஆரம். அந்த ஆபரணம், தங்கத்துடன் விலையுயர்ந்த கற்கள் கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த ஆபரணம் கால வெள்ளத்தைத் தாண்டிக் கிடைத்தாலும் முழுமையாக இல்லை.

மொகஞ்சதாரோ அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கிடைத்தாலும், ஆபரணங்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றும், அவற்றில், குறிப்பிட்ட தங்க ஆரம் மட்டுமே மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும், இந்திய வரலாற்று ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான சுதேஷ்னா குஹா கூறுகிறார்.

அந்தப் பொன் ஆபரணம், ஒரு தாமிரப் பாத்திரத்துக்குள் இருந்தது. அது ஒரு பொற்கொல்லரின் வீட்டிலிருந்து கிடைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆபரணத்தின் ஒரு பகுதி இந்தியாவுக்கும், மற்றொரு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரித்து வழங்கப்பட்டன.

ஏன், பிரிவினைக்குச் சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 வாத்துகள் கூட இரு நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன.



ஜாய்முனி என்ற ஒரு யானை கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போதைய வங்காளதேசம்) கொடுக்கப்பட, அதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எது எப்படியிருந்தாலும் தான் இந்தியா விலேயே தங்கப்போவதாக அந்த யானையின் பாகன் அறிவித்தார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரிவினை ஓர் இளஞ்ஜோடியின் காதலையும் பிரித்தது.

பிரிவினையில் இப்படி நெஞ்சைச் சுடும் சோகம், பரிதாபங்களுக்குக் குறைவில்லை.

ஆனால் சொத்துகளைப் பிரித்துக்கொள்வதில் அதிகபட்சம் நியாயமாக நடந்துகொள்ள முயன்றார்கள். உதாரணமாக, வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து 21 தட்டச்சு எந்திரங்கள், 31 பேனா ஸ்டாண்டு, 16 தலையணைகள், 125 காகிதப் பெட்டிகள், 31 நாற்காலிகள் ஆகியவை பாகிஸ்தானுக்கு உரிய பங்காக அனுப்பப்பட்டன. அவற்றில் பென்சில், குண்டூசிப் பெட்டிகளும் இருந்தன.

ஆங்கிலேய இந்தியாவின் தலைநகரமாக இருந்த டெல்லி, சுதந்திர இந்தியாவின் இயல்பான தலைநகரமாக மாறியது. ஆனால் ‘புதிய’ பாகிஸ்தானுக்குத்தான் எதைத் தலைநகராக்குவது என்ற பிரச்சினை ஏற்பட்டது.

கடைசியில், மாகாணத் தலைநகராக இருந்த கராச்சியை பாகிஸ்தானின் தலைநகராக்குவது என்று முடிவெடுக்கப்பட்டாலும், அங்கு தேச தலையமையிடத்துக்குத் தேவையான அலுவலகங்கள், அரசு நிர்வாகத்துக்குத் தேவையான கட்டமைப்புகள், பொருட்கள் இல்லை.

புதிய நாட்டுக்குத் தேவையான காகிதம், கோப்புகள், பேனா, எழுதுபொருட்கள் போன்ற அடிப்படை பொருட்களை பெறுவதற்கே சிக்கல்கள் ஏற்பட்டன.

பேனா, பென்சில்கள், குண்டூசிகள் போன்ற சாதாரணப் பொருட்களே பகிர்ந்துகொள்ளப்பட்டபோது, விலைமதிப்பற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பிரிக்கப்படாமல் இருந்திருக்குமா? அதில் சர்ச்சைகள் உருவாகாமல் இருந்திருக்குமா?



அதிலும் எந்த ஒரு நாடும் தனது பெருமையாகக் காட்ட விரும்புவது, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைத்தான். அப்படிப்பட்ட இடங்களை எப்படி சரிசமமாகப் பிரிப்பது?

உதாரணமாக, சிந்து சமவெளி நாகரிகத்தின் மையமான மொகஞ்சதாரோ பாகிஸ்தானின் பாகத்தில் போய்விட்டது. மற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்தியாவின் பாகத்தில் வந்துவிட்டன.

பாகிஸ்தானுக்கு வேறு எந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமும் இல்லாததால், சிந்து சமவெளி நாகரிகம் தமக்கு மட்டுமே சொந்தமானது, இந்தியாவுக்குச் சொந்தம் அல்ல என்று நிரூபிக்க பாகிஸ்தான் படாதபாடு படுகிறது.

நாட்டைப் பிரிக்கும்போது, மொகஞ்சதாரோவில் கிடைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களும் பிரிக்கப்பட்டன.

பொருட்களை பிரிக்கும்போது, இந்தியாவுக்கு 60 சதவீதம், பாகிஸ்தானுக்கு 40 சதவீதம் என்ற அளவு பின்பற்றப்பட்டது. நடனமாடும் பெண்ணின் சிலை, தியானம் செய்யும் பூசாரியின் சிலை, தங்க ஆரம் ஆகியவை இதில் அடங்கும்.

நடனப் பெண்ணின் சிலை இந்தியாவுக்கும், தியானம் செய்யும் பூசாரியின் சிலை பாகிஸ்தானுக்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், தங்க ஆபரணத்தை பிரிக்கும்போது சிக்கல் எழுந்தது.

தங்க ஆபரணத்தை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவேயில்லை. எனவே, ஒன்றாக இருந்த பொன் ஆபரணம் இரு துண்டாக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் வழங்கப்பட்டது. இந்தியாவின் பங்காக கிடைத்த ஆபரணத்தின் ஒரு பகுதி டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இந்த ஆபரணத்தின் இரு துண்டுகளையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து காட்சிப்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.

பிரிவினைப் பங்கீட்டில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இந்தியா- பாகிஸ்தான் இரு தரப்புக்குமே மனத்தாங்கல் இருந்தது. அதுதான் நீடித்த கசப்புக்கும், வெடித்த போர்களுக்கும் காரணமாக அமைந்தது.

பாகிஸ்தானின் தந்தையான முகமது அலி ஜின்னா, ‘ஓர் இற்றுப்போன பிராந்தியத்தை’ தங்கள் பக்கம் தள்ளிவிட்டதாக குறை பட்டுக்கொண்டாராம்.

மேலும் செய்திகள்