மொபைல் வன்முறை

இணையத்தில் நடைபெறும் சைபர் குற்றங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறுபவை, செல்போன் குற்றங்கள்தான்.

Update: 2017-09-02 06:30 GMT
ணையத்தில் நடைபெறும் சைபர் குற்றங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறுபவை, செல்போன் குற்றங்கள்தான். முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். தொடர்ந்து அதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் உங்களுக்கு சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்களிடம் புகார் செய்ய வேண்டும். அதன் பிறகும் அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால் போலீசில் புகார் செய்ய வேண்டும்.

சில சமயங்களில் தவறுதலாக அழைத்த மர்ம நபர் உங்களிடம் ஏதாவது தகவல் கேட்டால் சொல்லாதீர்கள். மிரட்டிக்கூடக் கேட்கலாம் அப்போதும் சொல்லாதீர்கள். பதிலாக அவர் யார் என்று விசாரிக்கவும். அவர் அது இது என்று சாக்குப் போக்கு சொன்னால் கவனம். இதுபோன்ற சமயங்களில் நீங்கள் கோபப்பட்டாலோ அல்லது திருப்பிப் பதில் அளித்தாலோ, அது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிடும். அதனால் அதுபோன்ற அழைப்புகளை தொடர்ந்து நிராகரித்துவிட்டு அமைதியாக இருங்கள். தானாகவே அடங்கிவிடுவார்கள்.

இப்படி எந்த சுமுக வழியும் ஒத்துவரவில்லை என்றால், உங்கள் செல்லின் வாய்ஸ் மெசேஜில் பின்வருமாறு ஒரு மெசேஜை போட்டுவிடவும். ‘உங்கள் அழைப்பை தற்போது ஏற்க இயலாது. அதனால், நீங்கள் சொல்ல விரும்புவதை ‘பீப்’ ஒலிக்குப் பிறகு ரிக்கார்ட் செய்யவும். இல்லை எனில் இது தொந்தரவு தரும் அழைப்பாக கருதப்பட்டு உங்கள் எண் கண்காணிக்கப்படும்!’ என்பதுதான் அந்த மெசேஜ். இது நிச்சயம் உங்களுக்கு பலன் தரும் என்று செல்போன் சேவை வழங்குபவர்கள் சொல்கிறார்கள்.

பல டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பிரிடிசிட்டீவ் டயலிங் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அதாவது அந்த நிறுவனங்களில் உள்ள விற்பனை பிரதிநிதிகள் உங்கள் எண்ணை கம்ப்யூட்டருடன் இணைத்துவிடுவார்கள். அவை தானாகவே உங்கள் எண்ணை அழைக்கும். நீங்கள் அதை எடுத்து பேசும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்தால் யாராவது உங்களுக்கு பதில் அளிப்பார். இல்லையென்றால் எதிர்புறம் அமைதியாக இருக்கும். இந்த வகை அழைப்புகளை ‘அபாண்டன்ட் அழைப்புகள்’ என்று வகைப்படுத்துவார்கள். தொடர்ந்து இத்தகைய அழைப்புகள் வந்தால் அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்கலாம்.

மேலும் செய்திகள்