‘நீல திமிங்கல’ விளையாட்டால் நெல்லை பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை முயற்சி

‘நீல திமிங்கல’ விளையாட்டில் சிக்கிய நெல்லை பாலிடெக்னிக் மாணவர் கத்தியால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை பெற்றோர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Update: 2017-09-02 04:30 GMT
நெல்லை,

‘புளூவேல் கேம்’ எனப்படும் ‘நீல திமிங்கல’ இணையதள விளையாட்டு உலக அளவில் குழந்தைகள், வாலிபர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளை அடிமையாக்கி வருகிறது. 50 நிலைகளாக விளையாடப்படும் இந்த விளையாட்டு 50-வது நிலையில் தற்கொலை எண்ணத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நீல திமிங்கல விளையாட்டுக்கான தொடர்பு முகவரிகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து தமிழக போலீசாரும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இளைஞர்களின் உயிரை குடிக்கும் நீல திமிங்கல விளையாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டிஜி.பி. ராஜேந்திரன், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விளையாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மொட்டைமலை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரியிலும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் சசிகாந்தா போரா. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பத்தமடையை சேர்ந்த ஒரு மாணவர் ‘நீல திமிங்கல‘ விளையாட்டால் நேற்று முன்தினம் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். பத்தமடையை சேர்ந்த அந்த மாணவர் வள்ளியூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய படிப்பு படித்து வருகிறார்.

இவர் ‘நீல திமிங்கல‘ விளையாட்டை செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்து உள்ளார். அதன் கட்டளையை ஏற்று அதற்கு அடிமையான அந்த மாணவர் தனது கையில் குண்டு ஊசியால் குத்தி படம் வரைய முயன்றார். அதை பார்த்த அவருடைய பெற்றோர்கள் சத்தம் போட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவர் கத்தியால் தனது கையை வெட்டி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். உடனே அவருடைய பெற்றோர் அந்த மாணவரை மீட்டு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்.

பின்னர் அந்த மாணவர் உடலில் ஏற்பட்ட காயத்திற்கும், மன சோர்வுக்காகவும் பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை அருகே ‘நீல திமிங்கல‘ விளையாட்டால் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பத்தமடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளின் செல்போன்களிலும் ‘நீல திமிங்கல‘ விளையாட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளதா? என்று சோதனை நடத்த போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்