மதுவிற்பனையில் ஏற்பட்ட தகராறில் டிரைவர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

கும்பகோணம் அருகே மதுவிற்பனையில் ஏற்பட்ட தகராறில் டிரைவர்கள் 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-09-02 00:00 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முல்லைநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது50). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இதே பகுதி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, ரமேஷ். இவர்களில் ராமலிங்கம் தனியாகவும், கலியமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தனர். கும்பகோணம் அருகே உள்ள பாரதிநகர் பகுதியில் நேற்று முன்தினம் நாக.சந்திரன் என்பவர் இறந்தார். இதை ஊர் மக்களுக்கு தெரிவிக்க முத்துப்பிள்ளை மண்டபம் ஜெகதீஸ் காலனியில் வசிக்கும் விஸ்வநாதன் மகன் தினேஷ்(22)(ஆட்டோ டிரைவர்) என்பவரும் அம்மாத்தோட்டத்தை சேர்ந்த டிரைவர் குருமூர்த்தியும்(27) ஆட்டோவில் சென்று சுற்று வட்டார பகுதியில் மைக் மூலம் நாக.சந்திரன் இறப்பை அறிவித்தனர்.

இதன்பின் தினேஷ், குருமூர்த்தி ஆகிய இருவரும் முல்லை நகரை சேர்ந்த ராமலிங்கத்திடம் சென்று இன்று இரவு(நேற்றுமுன்தினம் இரவு) தங்களுக்கு மதுபாட்டில்கள் வேண்டும் என கேட்டனர். இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ராமலிங்கம் மதுபாட்டில்களை எடுத்துக்கொண்டு தினேஷ், குருமூர்த்தியிடம் கொடுக்க கலியமூர்த்தி வசிக்கும் ஐஸ்வர்யாநகர் வழியாக சென்றார். இதைப்பார்த்த கலியமூர்த்தி, ராமலிங்கத்திடம் சென்று நீ எப்படி எனது பகுதிக்கு வந்து மது விற்கலாம்? என கேட்டு தகராறு செய்தார்.

இதனால் ராமலிங்கத்துக்கும், கலியமூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி மதுபாட்டிலால் ராமலிங்கத்தின் தலையில் அடித்தார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் ராமலிங்கம் தரப்பினரும், கலியமூர்த்தி தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். இதன்பின் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இரவு 11.30 மணியளவில் கலியமூர்த்தி, ராமலிங்கம் தரப்பினருக்கு போன் செய்து நமது பிரச்சினையை சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என கூறினார்.

இதை நம்பிய ராமலிங்கம், குருமூர்த்தி, தினேஷ் உள்ளிட்ட 5 பேர் கலியமூர்த்தி வசிக்கும் ஐஸ்வர்யா நகருக்கு சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த கலியமூர்த்தி, ரமேஷ் மற்றும் நெப்போலியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராமலிங்கம், குருமூர்த்தி, தினேஷ் மற்றும் 5 பேரை வெட்ட முயன்றனர்.

உடனே ராமலிங்கம் உள்பட 3 பேர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். குருமூர்த்தி மற்றும் தினேசுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயமடைந்த குருமூர்த்தி, தினேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குருமூர்த்தி, தினேஷ் ஆகிய இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். மது விற்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க ஐஸ்வர்யா நகர், முல்லை நகர் பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்