ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவியும் கைது
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலுடன் மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.;
வடலூர்,
வடலூர் அருகே உள்ள ஆபத்தானபுரம் இளவரசம்பட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். இவருடைய மகன் ஆனந்தராஜ்(வயது 35), விவசாயி. இவரது மனைவி சூரியா(26).
இந்நிலையில் ஆனந்தராஜ் ஆபத்தானபுரத்தில் உள்ள ஒரு தைலமரத்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இவரது உடலை நேற்று முன்தினம் வடலூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த கொலையில் ஆனந்தராஜியின் நண்பரான அதேபகுதியை சேர்ந்த முருகன் (29) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது முருகனுக்கும், ஆனந்தராஜியின் மனைவி சூரியாவுக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்தால் ஆனந்தராஜை முருகன் கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியந்தது.
இந்த நிலையில் முருகன் ஆபத்தானபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமுவிடம் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவர் முருகனை வடலூர் போலீசில் அவர் ஒப்படைத்தார். முருகனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், எனக்கும் ஆனந்தராஜியின் மனைவி சூரியாவுக்கு இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை அவர் கண்டித்ததால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி கடந்த 24–ந்தேதி இரவு அவருடைய வீட்டுக்கு சென்றேன். அங்கிருந்த ஆனந்தராஜை இரும்பு பைப்பால் சரமாரியாக அடித்து கொலை செய்தேன். அப்போது சூரியாவும் அங்குதான் இருந்தார்.
இதையடுத்து கொலையை மறைப்பதற்காக ஆனந்தராஜின் உடலை அங்குள்ள சவுக்குதோப்புக்கு தூக்கி சென்றேன். பின்னர் அவரின் தலையை துண்டித்து கிணற்றிலும், உடலை மற்றொரு இடத்திலும் போட்டுவிட்டு சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கள்ளக்காதலன் தனது கணவரை தனது கண் எதிரே கொலை செய்து இருந்தும், அதை வெளியே யாரிடமும் சொல்லாமல், தனக்கு எதுவும் தெரியாதது போல் சூரியா இருந்துள்ளார். இதன் காரணமாக சூரியாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.