தமிழகத்தில் மாற்றத்திற்கு அடித்தளமிடும் வகையில் விழுப்புரம் சமூகநீதி மாநாடு அமையும்
தமிழகத்தில் மாற்றத்திற்கு அடித்தளமிடும் வகையில் விழுப்புரம் சமூகநீதி மாநாடு அமையும் என்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
விழுப்புரம்,
வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந் தேதி நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானார்கள். இவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17–ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர் கடைபிடித்து வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு வருகிற 17–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நேற்று மாநாட்டு மேடைக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்க தலைவர் குரு தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பந்தல்கால் நட்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் நடைபெற உள்ள சமூகநீதி மாநாடு மாநில அளவில் நடைபெறும் மாநாடு. அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்துகிற, உரிய சமூகநீதி பிரதிநிதித்துவத்தை வழங்குகிற மாநாடாக நடைபெறும்.
தமிழ்நாட்டு அரசியலில் டாக்டர் ராமதாஸ், பா.ம.க.வை உருவாக்கி பல்வேறு மாநாடுகள், பேரணிகள், போராட்டங்களை நடத்தி மிகப்பெரிய சாதனை படைத்த வரலாறு உண்டு. அந்த அடிப்படையில் டாக்டர் ராமதாசுடன் இணைந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிற இந்த சூழலில் நடைபெறுகிற மாநாடு தமிழக வரலாற்றில் திருப்புமுனை மாநாடாகவும், வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகவும் அமைய இருக்கிறது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். சரத்யாதவ் உள்ளிட்ட வட இந்தியாவில் இருந்து பல தலைவர்களும் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் மாற்றத்திற்கு அடித்தளமிடும் வகையில் இந்த மாநாடு அமையும். இதற்கான பணிகளை எங்கள் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தன்ராஜ், மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், சேகர், தாமரைக்கண்ணன், வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. காசாம்பு பூமாலை, மாநில துணைத்தலைவர்கள் அன்புமணி, ஹரிகரன், பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, புண்ணியகோடி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.