சென்னையில் நீல திமிங்கல விளையாட்டால் பிளஸ்-2 மாணவர் தற்கொலையா? போலீஸ் விசாரணை

சென்னையில் பிளஸ்-2 மாணவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய பரிதாப சாவுக்கு நீல திமிங்கல விளையாட்டு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-09-01 23:45 GMT
பெரம்பூர்,

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் கிஷோர் (வயது 17). வியாசர்பாடியில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி அவர் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கிஷோர் மடிக்கணினியிலும், செல்போனிலும் விளையாடிக்கொண்டு சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரை பெற்றோர் அழைத்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு கிஷோர் பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த போலீசார் உடனடியாக வந்து கிஷோரின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் கிஷோர் பயன்படுத்திய மடிக்கணினி, செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் அவர் நீல திமிங்கல விளையாட்டை விளையாடியது தெரியவந்தது. எனவே அவரின் பரிதாப சாவுக்கு காரணம் நீல திமிங்கல விளையாட்டா? அல்லது பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்