வண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

வண்ணாரப்பேட்டையில் மாநில கல்லூரி மாணவர் ஒருவரை, மற்றொரு கல்லூரி மாணவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

Update: 2017-09-01 22:15 GMT

ராயபுரம்,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 18). இவர் சென்னை மாநில கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று காலை, பிரவீன்குமார் கல்லூரி செல்வதற்காக கும்மிடிப்பூண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயிலில் வந்தார்.

பின்னர் வண்ணாரப்பேட்டையில் இறங்கிய அவர் பாரதி மகளிர் கலைக்கல்லூரி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த மற்றொரு கல்லூரி மாணவர்கள் 3 பேர், முன்விரோதம் காரணமாக பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து முத்தையால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய கல்லூரி மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

* காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் நண்பர்களுடன் குளித்தபோது தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவர் தினேஷ் (16) கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். அவரது உடல் நேற்று அதே பகுதியில் கரை ஒதுங்கியது.

* காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் லோகேஷை (35) தாக்கியதாக, சந்தீப் (24) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்