‘புளூவேல்’ ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்: கையை அறுத்துக்கொண்ட பள்ளி மாணவன்

‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் பள்ளி மாணவன் கையை அறுத்துக்கொண்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.

Update: 2017-09-01 20:45 GMT

மங்களூரு,

‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் பள்ளி மாணவன் கையை அறுத்துக்கொண்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.

‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டு

இந்தியாவில் நீலத் திமிங்கலம் எனப்படும் ‘புளூவேல்‘ விளையாட்டை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. 50 நாட்களை இலக்காக கொண்டே அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவு பிறப்பிக்கப்படும். அந்த உத்தரவை நிறைவேற்றும் மாணவர்கள் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில், இரவு நேரத்தில் திகில் படங்களை பார்ப்பது, கையை அறுத்துக்கொள்வது, மொட்டை மாடியில் இருந்து குதிப்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த விபரீதமான விளையாட்டுக்கு ஏராளமான மாணவ–மாணவிகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.

இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்த விளையாட்டு மட்டும் ஒழிந்தபாடில்லை. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் பள்ளி மாணவன் ஒருவன் இந்த விளையாட்டுக்கு தனது கையை அறுத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

கையை அறுத்துக் கொண்ட மாணவன்

மங்களூரு நகரை சேர்ந்தவன் 14 வயது சிறுவன். இவன் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த மாணவனுக்கு அவனுடைய பெற்றோர் விலையுயர்ந்த செல்போன் வாங்கி கொடுத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த மாணவனின் ஒரு கையில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய பெற்றோர், இதுகுறித்து மாணவனிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த மாணவன் கூறிய பதிலை கேட்டு அவனுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவன், பெற்றோர் வாங்கிக் கொடுத்த செல்போனில் ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளான். அப்போது, அந்த விளையாட்டில் கையை கத்தியால் அறுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவனும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளான்.

பெற்றோர்களுக்கு அறிவுரை

இதையடுத்து அவனுடைய பெற்றோர் மாணவனை மீட்டு மங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முன்னதாக, அவனிடம் இருந்து செல்போனை வாங்கி ‘புளூவேல்‘ விளையாட்டை அழித்துவிட்டனர். இதையடுத்து அந்த மாணவனுக்கு தனியார் மருத்துவமனையில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த தகவல் மங்களூரு நகர் முழுவதும் பரவியது. இதனால், நேற்று மங்களூருவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவ–மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை நடத்தியது. அப்போது, மாணவ–மாணவிகள் செல்போன்களில் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்காமல் இருப்பதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று அறிவுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.ஆர்.சுரேஷ் கூறுகையில், ‘இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டு குறித்து பள்ளி–கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்கவும், இதுபோன்று ஆபத்தான நிலைக்கு செல்வதை தடுக்கவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்‘ என்றார்.

மேலும் செய்திகள்