புதிய நிர்வாகிகள் நியமனத்தில் குறைகளை சரிசெய்ய வேண்டும் மாநில காங்கிரஸ் தலைவருக்கு மந்திரி ஆஞ்சனேயா கோரிக்கை
காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் குறைகளை சரிசெய்ய வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு மந்திரி ஆஞ்சனேயா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் குறைகளை சரிசெய்ய வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு மந்திரி ஆஞ்சனேயா கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
குறைகளை சரிசெய்ய வேண்டும்கர்நாடக மந்திரிசபையில் ஒவ்வொரு முறையும் ‘மாதிக‘ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 2 முதல் 3 பேர் வரை இடம் பெற்று இருந்தனர். இந்த முறை அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களில் நான் ஒருவன் மட்டுமே மந்திரியாக இருக்கிறேன். அதனால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று நான் எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். முதல்–மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஆகியோரிடமும் இதுபற்றி பேசினேன்.
அதன்படி எங்கள் சமுதாயத்தை சேர்ந்த திம்மாபூருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்கள் சமுதாயத்திற்கு மந்திரிசபையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ததில் உள்ள குறைகளை சரிசெய்ய கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எனது கோரிக்கை.
எந்த தவறும் செய்யவில்லைஅனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் தயாராக வேண்டும். இந்த விஷயத்தில் நான் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். புதிய மந்திரி திம்மாபூர் மீது பா.ஜனதாவினர் கவர்னரிடம் புகார் கூறியுள்ளனர். பொதுவாக அரசியல்வாதிகள் 2, 3 விலாசங்களை வைத்திருப்பது சகஜம். திம்மாபூர் எந்த தவறும் செய்யவில்லை.
இவ்வாறு மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.