மாணவி அனிதா தற்கொலை: மதுரையில் மாணவர் சங்கத்தினர் சாலைமறியல் போலீஸ் தடியடி
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மத்திய–மாநில அரசுகளை கண்டித்து, மதுரையில் மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
மதுரை,
நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய–மாநில அரசுகளே காரணம் என்று கண்டனம் தெரிவித்து மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தினர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தீண்டாமை முன்னணியினர் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தீண்டாமை முன்னணியின் மாநில செயலாளர் சாமுவேல்ராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் இந்திய மாணவர் சங்க மதுரை மாவட்ட தலைவர் வேலுதேவா, செயலாளர் செல்வா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய குழு உறுப்பினர் ஜென்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நீட் தேர்வில் விலக்கு வாங்க முடியாத தமிழக முதல்–அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் பெரியார் பஸ்நிலைய பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திலகர்திடல் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
இதனை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில் இந்திய மாணவர் சங்க மதுரை மாவட்ட தலைவர் வேலுதேவா உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து திலகர் திடல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.