ஏர்வாடியில் வாலிபர் கொலை: தந்தை–மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை

ஏர்வாடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் கோர்ட்டில் தந்தை–மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2017-09-01 22:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் செய்யது ரகுமத்துல்லா என்பவரின் மகன் அல்தாப் உசேன் (வயது28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் ஏர்வாடி பகுதியை சேர்ந்த அசரப்அலி என்பவரிடம் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு வாங்கிஇருந்தாராம். பலமுறை வாடகைக்கு பாத்திரங்கள் வாங்கிய வகையில் அல்டாப் உசேன் ரூ.36 ஆயிரம் பாக்கி வைத்திருந்தாராம். இதில் குறிப்பிட்ட அளவு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதம் உள்ள பணத்திற்கு பதிலாக 7 பவுன் தங்க நகைகளை கொடுத்தாராம்.

இந்தநிலையில் கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 13–ந்தேதி அல்டாப் உசேன் வாடகை பாத்திர கடைக்கு சென்று அசரப்அலியிடம் பணம் கொண்டு வந்திருப்பதாகவும், தங்க நகைகளை கொடுக்கும்படியும் கூறியுள்ளார். இதனை கேட்ட அசரப் அலி உள்ளே சென்று தங்க நகையை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது நகையை குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அல்டாப் உசேன் அசரப்அலியை தாக்கினாராம். தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட அசரப்அலியின் மகன் முகமது சலீம் ஓடிவந்து அல்டாப் உசேனை பதிலுக்கு தாக்கியுள்ளார். அவரையும் அல்டாப் உசேன் தாக்கி கீழே தள்ளிவிட்டு படுகாயப்படுத்தினாராம். இந்த சம்பவத்தை அறிந்து அருகில் கடை வைத்துள்ள அசரப்அலியின் தம்பி செய்யது அப்தாகிர், அவருடைய மகன் சகாபுதீன் ஆகியோர் வந்து தடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் மோதல் முற்றியது.

அப்போது ஆத்திரமடைந்த அசரப்அலி கீழே கிடந்த கத்தியை எடுத்து சரமாரியாக அல்டாப் உசேனை குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அல்டாப் உசேன் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி வழக்குப்பதிவு செய்து அசரப்அலி, அவரின் மகன் முகம்மது சலீம், தம்பி செய்யது அப்தாகிர், தம்பியின் மகன் சகாபுதீன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேசுவரன் வாலிபரை கொலை செய்த தந்தை, மகன் உள்பட 4 பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும், 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்