குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மானாமதுரை ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை
மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடியில் ஒருமாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் அவதியடைந்த கிராமமக்கள் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ளது கீழமேல்குடி. இந்த கிராமத்தில் 600–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அருகில் உள்ள கால்பிரவு விலக்கு வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வறட்சி ஒருபுறம் இருக்க, சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மோட்டார் பழுதால் கீழமேல்குடி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஒருமாத காலமாக குடிநீர் கிடைக்காமல் கீழமேல்குடி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தங்களது தண்ணீர் தேவைக்காக பல கி.மீ. நடந்துசென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சில நேரங்களில் பல கி.மீ. சென்றும் தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். நாள்தோறும் தனி மனிதன் ஒருவருக்கு 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தினந்தோறும் 3 லிட்டர் அளவு தண்ணீர் குடியுங்கள் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் கீழமேல்குடி மக்கள் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் குடிநீர் வினியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த கீழமேல்குடி கிராமமக்கள் காலிக்குடங்களுடன் மானாமதுரை ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் முற்றுகை போராட்டம் ஒரு மணி நேரமாக தொடர்ந்து நடந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அதிகாரிகள், போராட்டம் நடத்திய கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.