பொதுமக்களிடம் வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்த பெண் கிராம நிர்வாக அலுவலர்

தண்டராம்பட்டு அருகே பொதுமக்களிடம் வாங்கிய லஞ்ச பணத்தை பெண் கிராம நிர்வாக அலுவலர் திருப்பி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-09-01 23:45 GMT

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராயண்டாபுரம், அல்லப்பனூர் ஆகிய கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்தவர்களிடம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளில் சேர்வதற்காகவும், விவசாய நிலங்களுக்கு சிட்டா, அடங்கல், பிறப்பு, இறப்பு, முதியோர் உதவித்தொகை, அரசு புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்குவது உள்பட பல்வேறு பணிகளுக்கு ராயண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி (வயது 35), இவரது உதவியாளர்கள் கோவிந்தன், இந்திரா ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், பணம் பெற்றவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எந்த பணியும் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள், இதுகுறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் புகார் அளித்தனர்.

அவரது உத்தரவின் பேரில் தண்டராம்பட்டு தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் மகேந்திரமணி ஆகியோர் ராயண்டாபுரம் கிராமத்துக்கு சென்று பொதுமக்கள் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்களிடம் விசாரணை செய்தனர்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி தான் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், ராயண்டாபுரம், அல்லப்பனூர் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி பொதுமக்கள் முன்னிலையில் தான் வாங்கிய லஞ்ச பணத்தை அவர்களிடம் திருப்பி கொடுத்தார்.

பொதுமக்களிடம் பெறப்பட்ட மீதமுள்ள லஞ்ச பணத்தை ஒரு மாத காலத்திற்குள் அனைவருக்கும் திருப்பி கொடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதுகுறித்த தகவல் உதவி கலெக்டருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோவிந்தன் பீமாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கும், இந்திரா மலமஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்து தாசில்தார் உத்தரவிட்டார்.

மேலும், கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி மீது நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டருக்கு தாசில்தார் பரிந்துரை செய்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்