தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்றால் ஆட்சி கலைய வேண்டும்: திருச்சி சிவா எம்.பி.

தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்றால் ஆட்சி கலைய வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

Update: 2017-09-02 00:30 GMT

ஜோலார்பேட்டை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகள் கழித்து 1 மாதம் பரோலில் வந்துள்ள பேரறிவாளனை அவரது வீட்டில் திருச்சி சிவா எம்.பி. நேற்று சந்தித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், பேரறிவாளனை சந்தித்து, அவரது உடல்நலன் குறித்து விசாரிக்க சொல்லியிருந்தார். அதன் அடிப்படையில் பேரறிவாளனை சந்தித்து, அவரது உடல் நிலையையும், அவரின் தந்தையின் உடல் நிலையையும் விசாரித்தேன். பேரறிவாளனின் விடுதலை குறித்து ஸ்டாலின் குரல் கொடுத்து வந்தார். அதன் அடிப்படையில் தற்போது 26 ஆண்டுகள் கழித்து 1 மாதம் பரோலில் பேரறிவாளன் வந்துள்ளார். சட்டத்தின் உட்பிரிவு அடிப்படையில் இவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்.

கடந்த 10 மாதமாக தமிழகத்தில் அரசு இயங்கவில்லை. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கோவணத்தோடு டெல்லியில் போராடி வருகிறார்கள். இதனை அரசு கண்டுகொள்ளவில்லை. தற்போது செயல்பட்டு வரும் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அந்த கட்சியில் இருப்பவர்களே முதல்வர் மீதுள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தனித்தனியாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். பெரும்பான்மையை இழந்து மைனாரிட்டி அரசாக உள்ளது.

இப்படிப்பட்ட அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பிரதிபலிக்காது. அரசியல் சட்டத்தின்படி சட்டமன்ற உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பெரும்பான்மையோடு ஆட்சி நடத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பெரும்பான்மையை இழந்த அரசாக செயல்படும். தமிழகத்தில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. மத்திய அரசில் இருப்பவர்களுக்கு பயந்து இவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்றால் ஆட்சி கலைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி அன்பு, முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பெரியார்தாசன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் காளியப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்