அசல் ஆவணங்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கான இணையதள சேவை

அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டால் அதற்கான மாற்று சான்றிதழ் பெறுவதற்கான இணையதள சேவையை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2017-09-01 08:30 GMT
கோவை,

ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம், பாஸ்போர்ட், அடையாள அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் ஆகியவை தொலைந்து போனால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று புகார் அளித்தால் அதற்கு ரசீது அளிக்கப்படும். அதன்பின்னர் போலீசார் விசாரணை நடத்தி அந்த சான்றிதழ் கண்டுபிடிக்க முடியாது(நான் டிரேசபிள் சான்றிதழ்) என்ற சான்றிதழை கொடுப்பார்கள். அதை வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழுக்கான மாற்று சான்றிதழ் பெற்று விடலாம். இதுவரை இந்த நடைமுறை தான் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு காவல் இணையதளம் என்ற புதிய இணைய தள சேவை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய இணையதள சேவையை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம், பாஸ்போர்ட், அடையாள அட்டைகள், பள்ளி சான்றிதழ் ஆகிய அசல் சான்றிதழ் தொலைந்து போனால் அவற்றின் மாற்று சான்றிதழ்(டூப்ளிகேட்) பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி tnpolice.gov.in என்ற இணையதளத்தில் ஆவணங்கள் தொலைந்து போனது குறித்து புகார் அளிக்க வேண்டும். அதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, தொலைந்து போன நேரம், இடம், தொலைந்து போன ஆவணத்தின் விவரம், தற்போது உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டைகளான ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் எண்(ஓ.டி.பி.) வரும். அதன்பின்னர் அது உறுதி செய்யப்பட்டு விண்ணப்பதாரரின் ‘ஆவணம் தொலைந்து விட்ட அறிக்கை’ (லாஸ்ட் டாக்குமெண்ட் ரிப்போர்ட்) உடனடியாக விண்ணப்பதாரரின் இ-மெயிலுக்கு அனுப்பப்படும்.

அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்தால் அசல் சான்றிதழுக்கு இணையான மாற்று ஆவணம் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறையின் மூலம் போலீசார் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்களும் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டியதில்லை.

விபத்து வழக்குகளில் ஆவணங்கள் பெறும் வசதி

இதே போல சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்றுக் கொள்ள புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சாலைவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் வக்கீல்கள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை பெறலாம். அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் tnp-o-l-i-ce.gov.in என்ற இணையதளத்தில் சென்று முதல் தகவல் அறிக்கை எண், போலீஸ் நிலையம் அமைந்துள்ள மாவட்டம், நகரம் போன்ற விவரங்கள் உள்பட அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒரு ஆவணத்துக்கு கட்டணமாக ரூ.10-ஐ நெட்பாங்கிங் மூலம் செலுத்தினால் விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கு ஆவணம் அனுப்பப்படும்.

இந்த புதிய சேவையின் மூலம் விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வரவேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் ஆன்லைனிலேயே தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை கமிஷனர்கள் லட்சுமி, துரை, பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.முன்னதாக விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார்.

இதேபோல மாற்று சான்றிதழ் பெறுவதற்கான இணையதள சேவையை அவருடன் இணைந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்