‘புளூவேல்’ விளையாட்டை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

‘புளூவேல்’ விளையாட்டை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) கபில்குமார் சரத்கார் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-09-01 06:30 GMT
நெல்லை,

இதுகுறித்து அவர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த 1-3-2017-க்கு பிறகு நடந்த அனைத்து விபத்து வழக்குகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய ‘நெட் பேங்க்’ வசதி மூலம் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சேவை விரைவில் அரசு இ-சேவை மையத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு இ-சேவை மையத்தின் மூலமாக அனைத்து சான்றிதழ்களும் பெற்றுக்கொள்ளலாம். ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் உடனே பெற்றுக்கொள்ளலாம். இதை ஆன்லைன் மூலம் புகார் செய்யும் வசதியும் உள்ளது.

நெல்லை மாநகரில் இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மாநகரில் வழிப்பறி, திருட்டை தடுக்க 14 மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள். மேலும் 8 நான்கு சக்கர வாகனங்களிலும், 3 தேசிய ரோந்து வாகனங்களிலும் ரோந்து சென்று வருகிறார்கள். வாகன விபத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 1,182 பேருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. அரசு உத்தரவுப்படி நாளை (அதாவது இன்று) முதல் அனைவரும் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்து வழக்கு 50 சதவீதம் குறைந்து உள்ளது.

மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டான ‘புளூவேல்’ இணையதள விளையாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவிறக்கம் செய்து விளையாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைகளில் திமிங்கலம் போன்று ஏதேனும் படம் வரையப்பட்டிருந்தால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

நெல்லை மாநகரத்தில் இந்த ஆண்டு இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 834 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் ரூ.1 கோடியே 26 லட்சத்து 26 ஆயிரத்து 590 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துணை போலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமிஷனர்கள் நாகசங்கர், எஸ்கால் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கார், ஆன்லைன் மூலம் ஆவணங் களை பதிவிறக்கம் செய்யும் சேவையை தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்