எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கும் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கலெக்டர் ரோகிணி நேற்று ஆய்வு நடத்தினார்.

Update: 2017-08-31 23:30 GMT
சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 30-ந் தேதி, மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. விழாவுக்காக சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 8-ந் தேதி பந்தல் அமைப்பதற்கான கால்கோள்விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்,ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கும் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விளையாட்டு மைதானத்தை நேற்று கலெக்டர் ரோகிணி ஆர்.பாஜிபாகரே நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், கே.காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், வெற்றிவேல், ராஜா, மனோன்மணி, சின்னத்தம்பி, மருதமுத்து, சித்ரா, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆய்வின்போது கலெக்டர் ரோகிணி தெரிவித்ததாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு அனைத்து மாவட்டங்களிலிருந்து வருகை தரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், நலத்திட்ட உதவிகள் பெறவுள்ள பயனாளிகள் ஆகியோர் அமருவதற்கான இருக்கை வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், விழாவின் போது எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாத வகையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், வாகனங்கள் வெளியேறும் இடங்கள் என பல்வேறு இடங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கென முதற்கட்டமான மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணிகள், மழை நேரங்களில் விழா நடைபெறும் பகுதி, வாகனம் நிறுத்தும் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன், மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) சிவசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்