மும்பை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டர் கடலில் பிணமாக மீட்பு

மும்பையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டர் தீபக் அம்ரபுர்கர் கடலில் பிணமாக கரை ஒதுங்கினார்.;

Update:2017-09-01 04:30 IST
மும்பை,

மும்பையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டர் தீபக் அம்ரபுர்கர் கடலில் பிணமாக கரை ஒதுங்கினார்.

டாக்டர்

மும்பையில் உள்ள பாம்பே மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் தீபக் அம்ரபுர்கர் (வயது 58). கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.10 மணியளவில் கனமழை பெய்து கொண்டிருந்த போது, பணி முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக கார் வெள்ளத்தில் சிக்கி விடாமல் இருப்பதற்காக அவர் காரை அங்குள்ள ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

பரேலில் உள்ள துல்சி பைப் சாலையில் நடந்து வந்தபோது, அங்கு திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் அவர் தவறி விழுந்தார். இதில் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மாநகராட்சி மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடினார்கள். எனினும், அவரை மீட்க முடியவில்லை. நேற்று மூன்றாவது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. இந்த நிலையில், ஒர்லி கடலில் ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கி மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

பிணமாக மீட்பு

போலீசார் அங்கு தீயணைப்பு படையினருடன் சென்றனர். தீயணைப்பு படையினர் அந்த உடலை கயிறு கட்டி மீட்டனர். விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடல் நோய் நிபுணர் டாக்டர் தீபக் அம்ரபுர்கர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தவறிவிழுந்த பாதாள சாக்கடை திறந்து கிடந்ததற்கு மாநகராட்சியின் அலட்சியப்போக்கு தான் காரணம் என்று கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி போலீஸ் கமிஷனர் (தாதர்) சுனில் தேஷ்முக் கூறினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்