‘டெல்லியில் மீண்டும் போராட்டம் தொடங்குவேன்’ பிரதமருக்கு, அன்னா ஹசாரே கடிதம்
லோக்பால், லோக் அயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடங்குவேன்
புனே,
லோக்பால், லோக் அயுக்தா சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடங்குவேன் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதி உள்ளார்.
சமூக ஆர்வலரும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரே கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டத்தை கொண்டு வரக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அந்த சட்டம் கடந்த 2013-ம் ஆண்டில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இன்னும் லோக்பால், லோக்அயுக்தா சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. இதுகுறித்து காந்தியவாதி அன்னா ஹசாரே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்ப தாவது:-
பலமுறை கடிதம்
லோக்பால் மற்றும் லோக்அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நான் உங்களுக்கு பலமுறை கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஆனால் இதுகுறித்து எந்த பதிலும் உங்களிடம் இருந்து வரவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இதற்காக உங்கள் தரப்பில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்பட்ட தாகவும் தெரியவில்லை. ஊழல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. மக்கள் உங்களின் வாக்குறுதி களை நம்பி ஓட்டுப்போட்டனர். ஆனால் பணம் கொடுக்காமல் எந்த ஒரு வேலையும் முடிவதில் லை.
பணவீக்கம் கூட குறைந்த பாடில்லை. நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டு களாக நான் தொடர்ந்து உங்களுக்கு லோக்பால், லோக்அயுக்தா சட்டங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அதிர்ச்சியை மட்டுமே அனுபவப்படுகிறேன். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என் அடுத்த கடிதத்தில் நான் எப்போது டெல்லியில் போராட்டத்தை தொடங்குவேன் என்ற தகவலை தெரிவிப்பேன்.
இவ்வாறு அன்னா ஹசாரே தன் கடிதத்தில் கூறியுள்ளார்.