தினகரன் ஆதரவாளர்களுடன் தங்கி இருந்த சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ. வெளியேறினார்
புதுவை சொகுசு விடுதியில் தங்கி இருந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் நேற்று திடீரென வெளியேறி சென்றார்.
புதுச்சேரி,
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர மற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்ன வீராம்பட்டினத்தில் கடற்கரையையொட்டி உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்து வருகின்றனர். அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் புதிதாக வந்து சேர்ந்தனர்.
இந்த 20 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து புதுவையிலேயே முகாமிட்டு வருகின்றனர். நேற்று அதிகாலையில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டனர். பின்னர் அங்குள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்தனர். இதன்பின் விடுதி அறைகளில் முடங்கினர்.
தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், எஸ்.டி.கே. ஜக்கையன் மட்டும் கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்று விட்டு ஓரிரு நாட்களில் திரும்பி வந்தனர். மற்ற பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 18 பேரும் ஓட்டலின் உள்ளேயே 10 நாட்களாக முடங்கி கிடக்கின்றனர்.
அவர்களை சந்திக்க தினகரன் வர இருப்பதாக கூறி வெளியே செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர், உறவினர்களை சந்திக்க முடியாமல் அந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் நேற்று காலை சொகுசு விடுதியை விட்டு வெளியே சென்றார். அவரிடம் நிருபர்கள் கேட்ட போது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்திக்கப் போவதாக கூறினார். ஆனால் வேறு எதுவும் பேச மறுத்து விட்டார். அவர் தினகரனை சந்திக்க சென்றாரா? அல்லது தனது ஊருக்கு சென்றாரா? என்பது பற்றி தெரியவில்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. பார்த்திபன் சொகுசு விடுதியை விட்டு வெளியே சென்றார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு தொற்றியது. ஆனால் அவர் புதுவையில் பிரசித்திபெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலையில் மீண்டும் அவர் சொகுசு விடுதிக்கு திரும்பினார்.
மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ஏதேதோ காரணங்களை கூறி சொகுசு விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதி கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுகு அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.