அதிகாரிகள் ஆய்வின்போது காப்பகத்தில் இருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம் 2 சிறுமிகளும் தப்பினர்

அதிகாரிகள் ஆய்வின்போது காப்பகத்தில் இருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களுடன் 2 சிறுமிகளும் தப்பினர்.

Update: 2017-08-31 23:15 GMT

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் மேட்டு தெருவில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகம் அரசு அனுமதியின்றியும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் இயங்கி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் டேவிட் பால், குழந்தைகள் நல குழும உறுப்பினர் ஜஹீருதீன் முகமது ஆகியோர் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதில், காப்பகம் அனுமதியின்றி நடந்து வந்தது தெரிய வந்தது. அங்குள்ள அறைகளில் 10 சிறுவர்கள், 2 சிறுமிகள் இருந்தனர்.

மேலும் அங்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறை என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதிகாரிகள் 8 சிறுவர், 2 சிறுமிகள் உள்பட 10 பேரை மீட்டனர். தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பின்புறம் வழியாக 8 சிறுவர்கள், 2 சிறுமிகள் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் கூறியதாவது:–

இங்கு குழந்தைகள் காப்பகம் இயங்கி வந்துள்ளது. இங்கேயே முதியோர் இல்லமும் நடக்கிறது. எந்த விதிமுறைகளும் இங்கு பின்பற்றப்படவில்லை. இதையடுத்து இங்கிருந்த 8 சிறுவர்கள், 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் இந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டனர் இதை பயன்படுத்திக்கொண்ட சிறுவர்கள், சிறுமிகள் காப்பகத்தின் பின் வழியாக ஏறி குதித்து தப்பிச்சென்று விட்டனர். அவர்களின் விவரங்கள் எங்களிடம் உள்ளது. அதனை வைத்து தப்பிய சிறுவர்கள், சிறுமிகளை மீட்டு விடுவோம்.

இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்