அசல் ஓட்டுனர் உரிமம் தொடர்பான உத்தரவை வாபஸ் பெறக்கோரி திருப்பூரில் வருகிற 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்கிற உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Update: 2017-08-31 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சேகர், மோட்டார் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சசிக்குமார், பொருளாளர் ஜெகநாதன், இணை நிர்வாகிகள் சக்தி, மகேந்திரன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

வாகன ஓட்டுனர் அனைவரும் செப்டம்பர் 1–ந் தேதி முதல்(இன்று) அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமற்றது.

இது காவல்துறையின் அத்துமீறல்களுக்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். தனியாரிடம் வாகனம் ஓட்டுபவர்கள் தங்களின் அசல் ஓட்டுனர் உரிமம், பள்ளி சான்றிதழ் போன்ற ஆவணங்களை வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டுத்தான் பணி செய்து வருகிறார்கள். வாகன ஓட்டுனர்கள் நடைமுறையில் சந்திக்கும் இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு?. செல்லும் இடம் எல்லாம் அசல் ஆவணங்களை எடுத்துச்செல்லும் போது அவைகள் தவறிவிடும் அபாயம் உள்ளது.

மாற்று ஓட்டுனர் உரிமம் பெறுவது சுலபம் அல்ல. கடுமையான நிபந்தனைகள் உள்ளன. சாலை விபத்துக்கு காரணம் போதுமான சாலை வசதி இல்லாதது தான். எதிரே வரும் வாகனத்தில் அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளின் ஒளிவீச்சும் விபத்துக்கு முக்கிய காரணமாகும். அசல் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக்கொண்டு பல வகையில் வாகன ஓட்டிகளை மிரட்டுவதற்கு இந்த நடைமுறை வழிவகையாக அமையும்.

எனவே இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது, திருப்பூர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக பழைய பஸ் நிலையம் முன் கட்டப்படும் பாலப்பணிகளையும், பழுதடைந்த சாலைகளையும் சீர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 8–ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்