பெண் அதிகாரி தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

பெண் அதிகாரி தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2017-09-01 00:30 GMT
பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் ராஜூ. இவர் பட்டு வளர்ப்பு துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிர்மலா(வயது26). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் பிர்கா வருவாய் ஆய்வாளராக பணி புரிந்தார்.
இவருக்கும், திருச்சியை சேர்ந்த இளையராஜாவுக்கும்(35) கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இளையராஜா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பணி நிமித்தம் காரணமாக பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தனியாக வீடு எடுத்து நிர்மலா பணிபுரிந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் மனைவி நிர்மலாவை பார்ப்பதற்காக இளையராஜா பெரம்பலூருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி நிர்மலாவிற்கும், இளையராஜாவிற்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மன முடைந்த நிர்மலா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

நிர்மலாவிடம், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் வாக்குமூலம் வாங்கினார். அதன்அடிப்படையில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு பெரம்பலூர் மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்றது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நிர்மலாவின் கணவர் இளையராஜா, மாமியார் தங்கம்மாள், இளையராஜாவின் அண்ணி மலர் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட நிர்மலாவின் குடும்பத்தினருக்கு மனரீதியான பாதிப்புக்கு தகுந்தபடி இழப்பீட்டு தொகையை தமிழக அரசு நிர்ணயம் செய்து விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து தண்டனை பெற்ற 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்