சேலத்தில் கைதான ரியல்எஸ்டேட் அதிபரின் ஜவுளி கடைக்குள் புகுந்து முற்றுகை பணம் கட்டி ஏமாந்தவர்கள் போராட்டம்

சேலத்தில் கைதான ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் அவரது ஜவுளி கடைக்குள் புகுந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-31 22:30 GMT

ஈரோடு,

சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ‘வின்ஸ்டார் இந்தியா’ நிறுவனத்தின் கிளை ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் 100 நாட்களில் ரூ.1½ லட்சம் கிடைக்கும், குறைந்த விலையில் பாக்கு மட்டை எந்திரம், நிலம் வாங்கி கொடுத்தல் என பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பிய பொதுமக்கள் பணம் முதலீடு செய்தனர். இதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்து உள்ளது. இதுதொடர்பாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்த சேலம் அழகாபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

அவரது நிறுவனத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் ஈரோட்டில் உள்ள அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அப்போது அலுவலகம் மூடப்பட்டு இருந்ததால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அருகில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடைக்குள் பொதுமக்கள் புகுந்தனர். அந்த கடையை முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

திருப்பூர் மாவட்டம் ஊதியூரில் உள்ள கோடீஸ்வரன்நகரில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார். அதனை நம்பி நாங்கள் ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை கொடுத்து உள்ளோம். அப்போது பணத்தை பெற்றுக்கொண்டு ரசீதை கொடுத்தார். அதன்பிறகு எங்களது பெயரில் நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை அலுவலகத்திற்கு வந்து கேட்டால் ஏதாவது ஒரு காரணம் கூறி வந்தனர். இதேபோல் பாக்கு மட்டை எந்திரம் வாங்கி கொடுப்பதாகவும், பணம் கொடுத்தால் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாகவும் பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி நடந்து உள்ளது. எனவே எங்களுடைய பணத்தை மீட்டுத்தர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். அதன்பின்னர் அலுவலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்