கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 3 புதிய மந்திரிகள் இன்று பதவி ஏற்பு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
கர்நாடக மந்திரிசபை இன்று(வெள்ளிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய மந்திரிகளாக 3 பேர் பதவி ஏற்க உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை இன்று(வெள்ளிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய மந்திரிகளாக 3 பேர் பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
மந்திரிசபை விரிவாக்கம்முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மகாதேவ பிரசாத் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மேலும் போலீஸ் மந்திரியாக இருந்த பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால், அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல, கலால்துறை மந்திரியாக இருந்த எச்.ஒய்.மேட்டி செக்ஸ் புகாரில் சிக்கியதால் மந்திரி பதவியை இழந்தார். இதனால் கர்நாடக மந்திரிசபையில் 3 இடங்கள் காலியாக உள்ளன.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2018) ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், மந்திரிசபையில் காலியாக உள்ள 3 இடங்களையும் நிரப்ப முதல்–மந்திரி சித்தராமையா மற்றும் மாநில தலைவர் பரமேஸ்வர் நடவடிக்கை எடுத்து வந்தார்கள். அதைத்தொடர்ந்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் சித்தராமையாவுக்கு அனுமதி வழங்கினார்கள்.
3 புதிய மந்திரிகள் இன்று பதவி ஏற்புஇதனால் கடந்த மாதம்(ஆகஸ்டு) 19–ந் தேதி அல்லது 21–ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மந்திரி பதவியை கைப்பற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் இடையே கடும் போட்டி உருவானது. அதே நேரத்தில் மந்திரி பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக காங்கிரசில் உட்கட்சி மோதல் உருவானது. இதனால் மந்திரிசபை விரிவாக்கத்தை முதல்–மந்திரி சித்தராமையா தள்ளிப்போட்டு வந்தார்.
இந்த நிலையில், கர்நாடக மந்திரிசபை இன்று(வெள்ளிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய மந்திரிகளாக 3 பேர் பதவி ஏற்க உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கவர்னர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் புதிய மந்திரிகளாக 3 பேர் பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதிய மந்திரிகள் யார்?இந்த நிலையில், புதிய மந்திரிகளாக யாரை நியமிப்பது, அவர்களுக்கு எந்த துறைகளை ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாக நேற்று கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில தலைவர் பரமேஸ்வருடன் சித்தராமையா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது புதிய மந்திரிகளாக எச்.எம்.ரேவண்ணா, சடக்ஷரி, மறைந்த மகாதேவ பிரசாத்தின் மனைவி கீதா ஆகிய 3 பேரையும் நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு வேணுகோபால் சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், போலீஸ் மந்திரி பதவியை கைப்பற்ற தற்போது மின்சாரத்துறை மந்திரிகளாக இருக்கும் டி.கே.சிவக்குமார், வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரியாக உள்ள ரமாநாத் ராய் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் போலீஸ் மந்திரியாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றி இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.