இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சின்னமாக இரட்டை இலை இருந்தது. சமீபத்தில் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

Update: 2017-08-31 23:00 GMT

மதுரை,

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சின்னமாக இரட்டை இலை இருந்தது. சமீபத்தில் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதனை மீண்டும் பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அ.தி.மு.க. 3 அணியாக பிரிந்துள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டபோது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முறையை பின்பற்றி அ.தி.மு.க.விலும் பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும். எனவே ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் அணிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனு குறித்து இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை, சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணையை வருகிற 13–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்